பாஜக, அகாலிதளத்துக்கு நன்றி.. மமதாவும் ஆதரிப்பார்: சங்மா

டெல்லியில் பி.ஏ.சங்மாவை ஆதரிக்க பாஜக முடிவு செய்திருப்பதாக அதன் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ரவிபிரசாத் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சங்மா, பாரதிய ஜனதாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல் தம்மை ஆதரிக்க சிரோன்மணி அகாலிதளமும் முன்வந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். மமதா பானர்ஜியிடம் தொடர்ந்து தாம் பேசிவருவதாகவும் நிச்சயம் அவர் தம்மை ஆதரிப்பார் என்று நம்புவதாகவும் சங்மா கூறினார்.
இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தம்மை முன்னிறுத்தியதற்காக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சங்மா தெரிவித்தார்.
மேலும் குடியரசுத் தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெற இருப்பதால் தேர்தலில் தமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றார் சங்மா.
அகதாவின் நிலை?
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் விலகிவிட்டதாகவும் தமது மகள் அகதா சங்மா இன்னமும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அமைச்சராக இருந்து வருகிறார் என்றும் அவர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிப்பார் என்றும் சங்மா கூறினார்.












Click it and Unblock the Notifications