சிறுவாணி ஆற்றில் கேரளா அணை கட்டாமல் தடுக்கக் கோரி பிரமருக்கு ஜெயலலிதா கடிதம்

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடியில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டத்துக்காக 4.5 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட கேரளா திட்டமிட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.
இது தமிழக மக்களை கவலை அடைய செய்திருக்கிறது. அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டத்தை கேரளா செயல்படுத்தினால் பவானி ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு கனிசமாக குறைந்துவிடும். கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடிநீர் தேவைக்கு சிறுவாணியை நம்பியே உள்ளனர்.
இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி அளித்தால் கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். முன்பு இந்த விவகாரத்தை காவிரி நடுவர் மன்றத்திடம் கொண்டு வந்த கேரள அரசு, சட்டப்படி நீர்ப்பாசன திட்டத்துக்கு 4.5 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று கோரியது.
கேரளாவின் இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. நடுவர் மன்றம் 5.2.2007 அன்று தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டத்துக்கு கேரளாவுக்கு 2.87 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே ஒதுக்கி உத்தரவிட்டது. ஆகவே கேரள அரசின் தற்போதைய திட்டம், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மீறும் செயலாகும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து கேரளா, கர்நாடகா அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. தவிர, இறுதி தீர்ப்பின் சில அம்சங்கள் குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. மேலும் மாநிலங்கள் இடையேயான நதிநீர் பங்கீடு சர்ச்சைகள் சட்டம் 1956-ன்படி மேற்கண்ட 3 மாநிலங்களும் காவிரி நடுவர் மன்றத்தில் விவரம் அறியும் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இந்த சூழ்நிலையில் காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் அறிவித்த அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாகும் வரை, காவிரி படுகை அல்லது இதன் துணை படுகைகளில் எந்தவொரு புதிய திட்டங்களையும் தொடங்காமல் பொறுமையுடன் இருப்பதுதான் சிறந்த முறையாகும்.
எனவே நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மீறி சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி நீர்ப்பாசன திட்டத்தையோ அல்லது வேறு எந்த திட்டங்களையோ செயல்படுத்தக் கூடாது என கேரள அரசுக்கு தாங்கள் அறிவுரை கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் கேரளாவின் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய நதிநீர் ஆணையத்துக்கும் தாங்கள் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலனை பாதுகாக்க, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications