For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் சிறையில் அடைபட்டால் ஜனாதிபதி தேர்தலில் எப்படி ஓட்டுப் போடுவார்கள்?

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திமுக தலைமை அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டம் திமுகவினர் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக அரசு வேண்டும் என்றே திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை பல்வேறு சட்டப் பிரிவுகளில் கைது செய்து உள்ளேயே வைத்து விட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலின்போது திமுக எப்படிப் பங்கேற்க முடியும் என்பதுதான் அதில் பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.

திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக திமுகவினர் தயாராகி வருகின்றனர். அதேபோல காவல்துறையினரும் ஆயத்தமாகி வருகின்றனர். இதுதொடர்பாக டிஜிபி தலைமையில் உயர் காவல்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனையை நடத்தி முடித்துள்ளனர். இதனால் திமுகவினர் மத்தியில் ஒருவிதமான பீதியும் காணப்படுகிறது. பல திமுகவினர் போராட்டத்தில் பங்கேற்க அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா அரசை நம்ப முடியாது. பல்வேறு சட்டப் பிரிவுகளில் கைது செய்து வேண்டும் என்றே நீண்ட நாட்களுக்கு உள்ளேயே வைத்து விட்டால் நமது நிலை என்ன ஆவது, குடும்பத்தின் நிலை என்ன ஆவது என்பது பல திமுகவினரின் சந்தேகமாகும்.

இந்த நிலையில் திமுகவின் உயர் மட்ட அளவில் புதிதாக ஒரு குழப்பம் வெடித்துள்ளது. அது குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தது. அதாவது ஜூலை 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை திமுக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளது. நாளை கைது செய்யப்படும் யாருமே ஜாமீன் கேட்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்றே கூறி விட்டார்.

நாளை கைது செய்யப்படுவோர் ஒரு வேளை பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் குறைந்தது 14 நாட்களுக்கு அவர்கள் ரிமாண்ட் செய்யப்படுவார்கள். அதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நாள் வரை அவர்கள் சிறையில் இருக்க நேரிடும்.

இங்குதான் புதிய சிக்கல் வருகிறது. சாதாரணத் தொண்டர்களுக்கு இந்த குடியரசுத் தலைவர் தேர்தலால் எந்தப் பிரச்சினையம் கிடையாது. ஆனால் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்குத்தான் தற்போது சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக அரசு வேண்டும் என்றே இவர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு வெளியே வர முடியாத நிலையை உருவாக்கி விட்டால், திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதை எப்படி திமுக தலைமை சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் ஜாமீன் கேட்க தலைமைக் கழகம் முடிவு செய்யுமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் கொந்தளித்து விடுவார்கள் என்பதால் அதை திமுக தலைமை செய்யாது என்றே தெரிகிறது.

திமுகவினர் மீது அதிமுக அரசு என்ன மாதிரியான புகார்களை சுமத்தி உள்ளே தள்ளப் போகிறது என்பதும் பெரும் மர்மமாக உள்ளது. அதேசமயம், கைதாகும் திமுகவினரை நிச்சயம் குறைந்தது 15 நாட்களாவது அரசு சிறையில் வைக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அப்படி நடந்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவுக்கு பெரும் சிக்கலாகி விடும். அதை விட முக்கியமாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் பெரும் சங்கடமாகி விடும். அக்கட்சியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு தமிழகத்திலிருந்தும் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை மனதில் கொண்டே திமுகதலைவர் கருணாநிதி, போராட்டம் மிக மிக அமைதியாக நடைபெற வேண்டும், வன்முறை உள்ளிட்டவற்றில் ஈடுபடக் கூடாது என்று திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, ஜெயலலிதா அரசு மீது கொண்ட சந்தேகத்தால் சிறை நிரப்பும் போராட்டத்தில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. குறிப்பாக அழகிரி இந்தப் போராட்டத்தின் நிழலைக் கூட பார்க்க மாட்டார் என்றும் கூறுகிறார்கள். ஒரு நாள் கூட சிறையில் இருக்க அழகிரி விரும்பவில்லை என்பதே திமுகவினரின் பேச்சாக உள்ளது.

திமுகவிடம் தற்போது 23 எம்.எல்.ஏக்கள், 18 எம்.பிக்கள் உள்ளனர். ஒருவேளை போராட்டத்திலிருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அப்படிச் செய்தால், சாதாரணத் தொண்டர்கள் அதையும் ஏற்க மாட்டார்கள் என்பதால், திமுக தலைமைக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் கருணாநிதி, இந்த இடியாப்பச் சிக்கலை எப்படி சமாளித்து தீர்க்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

English summary
“Fill jail but no bail” has been the call by DMK chief M Karunanidhi and second-in-command MK Stalin to their cadres across the state. Filling the jails is fine, since about 30 percent of the Tamil Nadu jails are empty, but for how long without bail? More importantly Will it come very close to the Presidential election on 19 July?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X