அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்!

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த கீழ்சாந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவரது மனைவி அன்புலட்சுமி(22). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 8ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அன்று இரவு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அன்புலட்சுமிக்கு உதவியாக, அவரது மாமியார் முத்துலட்சுமி(55) உடன் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில், அன்புலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டிற்கு வந்த இளம்பெண், அவரிடம் பேச்சு கொடுத்தார். தன்னை மருத்துவமனை பணியாளர் என்று அறிமுகப்படுத்தி கொண்ட அந்த பெண், பச்சை நிறத்திலான சுடிதார் அணிந்திருந்தார்.
மேலும் அன்புலட்சுமிக்கு பிரசவம் பார்த்த டாக்டருக்கு இன்று பிறந்தநாள் என்பதால், குழந்தைக்கு பரிசு கொடுக்க விரும்புவதாக தெரிவி்த்தார். அதற்காக குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்டார். இதனை நம்பிய முத்துலட்சுமி, குழந்தையை ஒரு துணியில் சுற்றி, அந்த பெண்ணிடம் கொடுத்தார்.
சற்றுதூரம் சென்ற அந்த இளம்பெண், முத்துலட்சுமி தன்னுடன் வருவதை பார்த்து, நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய் குழந்தையை காட்டிவிட்டு வருகிறேன் என்று கூறிவி்ட்டு சென்றார்.
அதன்பிறகு நீண்டநேரமாகியும், அந்த பெண் மீண்டும் வரவில்லை. இதில் பயந்து போன முத்துலட்சுமி, இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர்.
அதன்பிறகு போலீசார் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் முத்துலட்சுமியிடம் குழந்தையை வாங்கி சென்ற பெண்ணின் முகம் பதிவாகி இருந்தது. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் எஸ்.ஐ.கலையரசி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, நாமக்கல், திருச்சி, முசிறி பகுதிகளில் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை தேடி வந்தனர்.
விசாரணையில் நாமக்கலை அடுத்த என்.புதுப்பட்டியை சேர்ந்த ஒரு இளம்பெண் பெண் குழந்தையுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, சேகர் மனைவி சுமதி(25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த அன்புலட்சுமியின் குழந்தை மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் விசாரணையில், 6 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த சுமதி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தையை நைசாக பேசி வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் கண்காணிப்பு கேமராவில் அவரது படம் பதிவானதால், போலீசாரிடம் சிக்கி கொண்டது தெரியவந்தது.
போலீசாரால் மீட்கப்பட்ட குழந்தை, அதன் தாய் அன்புலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சுமதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications