காவல் நிலையத்தில் பெண் கற்பழிப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மாதர் சங்கம் கோரிக்கை
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பெண்ணை கடமலைக்குண்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் என். அமிர்தம், பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த பிப்ரவரி 11ம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வசந்தி என்ற பெண்ணை 13ம் தேதி வரை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், சில காவலர்களும் சேர்ந்து அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அந்த இன்ஸ்பெக்டர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காவலர்கள் அந்த பெண்ணின் நகக்கண்ணில் தாக்கியும் உடல் முழுக்கக் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்து நாலரை மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்தப் பெண்ணின் உடல் முழுவதிலும் காவல்துறையினர் தாக்கியதால் ஏற்பட்ட காயத் தழும்புகள் உள்ளது. இச்சம்பவம் பத்திரிக்கை, டிவிக்களில் வெளிவந்தும் கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் வழக்கம் போல் மாவட்டத்தின் எஸ்.பி. எந்தவித விசாரணையையும் நடத்தாமல் இந்த சம்பவமே நடக்கவில்லை என மறுத்துள்ளார்.
பாலியல் பலாத்கார புகாரை அந்த மாவட்ட எஸ்.பி. மறுத்திருக்கும் நிலையில் காவல்துறையின் விசாரணையில் எந்தவித உண்மை நிலையும் வெளிவராது. எனவே, இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலிலதா தலையிட்டு குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications