தமிழக மீனவர் பலி: யுஏஇயுடன் இணைந்து இந்தியா விசாரணை நடத்த பிரதமரிடம் திமுக கோரிக்கை
டெல்லி: துபாயில் அமெரிக்க கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இணைந்து விசாசரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை திமுக எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்தித்த திமுக எம்.பிக்கள், அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் மற்றும் படுகாயமடைந்தோருக்கு அமெரிக்கா மற்றும் மீனவர்கள் பணியாற்றிய துபாய் நிறுவனத்திடம் இருந்து உரிய நிவாரணத் தொகையைப் பெற்றுத்தரவும் வலியுறுத்தினர்.
மேலும் இதுபோன்ற சம்பவம் உலகின் எந்த ஒரு இடத்திலும் நடக்காத வகையில் முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் திமுக எம்.பிக்கள் கேட்டுக் கொண்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான சேகரின் உடலை பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் படுகாயமடைந்த மீனவர்கள் சிகிச்சைக்காக நாட்டுக்குக் கொண்டுவரவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை கடற்படையினரின் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால்தான் தமிழக மீனவர்கள் துபாய் போன்ற வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது என்பதையும் திமுக எம்.பிக்கள், மன்மோகன்சிங்கிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications