பெண் தொழில் முனைவோர்கள் : மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ. 54 கோடி ஜெ ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் 1991-1992 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. மகளிர் பொருளாதார நிலையை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிக் குழந்தைகளுக்காக வழங்கப்படும் இரண்டு இணை பள்ளிச் சீருடைகளை மகளிர் தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தைத்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு முதல் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிக் குழந்தைகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகப்படியாக வழங்கப்படும் சீருடைகளை குறித்த காலத்திற்குள் வழங்குவதற்கு வசதியாகவும், கூட்டுறவு சங்கங்களில் உள்ள மகளிர் அதிக ஊதியம் பெறவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு 54 கோடி ரூபாய் செலவில் 54000 நவீன தையல் இயந்திரங்கள் வாங்குவதற்கும், இந்த நவீன தையல் இயந்திரங்களை கையாளுவதற்கான பயிற்சியை உறுப்பினர்களுக்கு அளிப்பதற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தையல் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கான தையல் கூலியினை ஒவ்வொரு ஆண்டும் 5 விழுக்காடு உயர்த்திக் கொள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இந்த உயர்வு 2013-2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நவீன தையல் இயந்திரம் வாங்குவதற்கான நிதி, உறுப்பினர்களுக்கு அவர்கள் உறுப்பினராக இருக்கும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்களின் மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்டு வழங்கப்படும். இந்த கடன் பெறுவதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு செலுத்த வேண்டிய தையல் இயந்திரத்தின் விலையில் 10 விழுக்காடு ஆதார நிதியை அரசே மானியமாக உறுப்பினர்களுக்காக வங்கிக்கு செலுத்தும். இதற்காக அரசுக்கு 5 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இக்கடனுக்காக, குறைந்தபட்ச வட்டி மட்டுமே உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்படும். மகளிர் தையற் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை 5 வருடங்களுக்குள் மாதாந்திர தவணைகளாகவோ அல்லது வருடாந்திர தவணைகளாகவோ முழுமையாக செலுத்தி முடிக்க வேண்டும்.
தையல் இயந்திரத்திற்கான தவணை முழுவதும் செலுத்திய பின், தையல் இயந்திரம் அவர்களுக்கு சொந்த உடைமையாகும். இந்த நவீன தையல் இயந்திரங்கள் உறுப்பினர்களின் தனிப்பட்ட மதிப்புமிக்க சொத்தாக ஆவதோடு, அதன் மூலம் அவர்களை தனி நபர் தொழில் முனைவோராகவும் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications