For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுட்டுப் போட்டாலும் இனி யாருடனும் கூட்டணி சேர மாட்டேன்: விஜயகாந்த்

By Siva
Google Oneindia Tamil News

Vijayakanth
ராமநாதபுரம்: சுட்டுப் போட்டாலும் இனி யாருடனும் கூட்டணி சேரப் போவதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை முன்பு வறுமை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மாட்டு வண்டி மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பிறகு அவர் பேசியதாவது,

எனது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ. 20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தத்தான் இவ்வாறு செய்கிறோம். வரிப்பணத்தை வைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். எதற்காகவும் முதல்வரிடம் குறுகிப்போக மாட்டேன்.

விஜயகாந்த் ஒரு கோபக்காரன் என்கின்றனர். கோபம் இருக்குமிடத்தில் தான் குணம் இருக்கும். யாராவது தவறு செய்தால் அது யாராக இருந்தாலும் கண்டிப்பேன். நாட்டில் உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டுமானால் கண்டிப்பாக எதிர்கட்சி இருக்க வேண்டும் என்று மத்திய அரசைப் பற்றி கூறிய ஜெயலலிதா தமிழகத்தில் மட்டும் எதிர்கட்சி என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். சுட்டுப் போட்டாலும் இனி யாருடனும் கூட்டணியே வைக்க மாட்டேன்.

இலங்கையில் போர் முடிந்து ஆண்டுகள் ஓடியும் இந்நாள் வரை அந்நாட்டு கடற்படையினரின் அட்டூழியம் அளவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் பிரதமருக்கும், பிரதமர் இலங்கை அதிபருக்கும் கடிதம் எழுதுகிறார்களே தவிர இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை அடக்க முடியவில்லை.

கச்சத்தீவை மீட்டால் ஒழிய இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. இலங்கை கச்சத் தீவு ஒப்பந்தத்தை மீறுவது குறித்து மத்திய அரசு எதுவும் கேட்கவில்லை. தமிழக மீனவர்கள் ஒற்றுமையாகவும், ஆளுங்கட்சிக்கு அஞ்சாமலும் என்னுடன் வந்தால் கச்சத் தீவை மீட்க கடலில் இறங்கி கட்டுமரத்தில் ஏறி போராடத் தயாராக இருக்கிறேன்.

தமிழகத்தில் மணல் கொள்ளையும், கிரானைட் கொள்ளையும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சம்பாத்தித்த ரூ.16,000 கோடியையும் திரும்பப் பெற்று அதனை மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்க பயன்படுத்த வேண்டும். ஆளுங்கட்சிக்கு பயப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். என்னை கைது செய்ய முயற்சிக்கின்றனர். அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். ஏனென்றால் நானும், எனது கட்சி தொண்டர்களும் யாரிடமும் நிதி கேட்கவில்லை.

எந்த வழக்கையும் சந்திக்க தயார். எத்தனை ஆண்டுகள் வேண்டும் என்றாலும் சிறையில் இருக்கவும் தயார். எம்.ஜி.ஆர். மக்களை ஏமாற்றாமல் ஆட்சி செய்தார். அதனால் தான் அவரால் தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடிந்தது. ஆனால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மக்களை ஏமாற்றுவதால் தான் அவர்களால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் மின்திட்டம் செயல்படவில்லை. தனது நேரடிப் பார்வையில் உடன்குடி மின் உற்பத்தி நிலையம் உள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். ஆனால் அங்கு ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. கடந்த 1991ம் ஆண்டு முதல் தமிழகத்தில் எந்த புதிய மின்திட்டங்களும் தீட்டப்படாததால் தான் தற்போது 5 மணிநேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்படுகிறது. திமுகவும் சரி, அதிமுகவும் சரி நதிகள் இணைப்பு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கட்சி துவங்கிய பிறகு சந்தித்த முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்கு வங்கி பெற்ற ஒரே கட்சி தேமுதிக தான்.

தேமுதிக தொண்டர்களின் கடும் உழைப்பால் தான் தாம் இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறோம் என்பதை அதிமுக மறக்கக் கூடாது. பழி தீர்க்கும் எண்ணத்தோடு செயல்படாமல் மக்களை பற்றியும் சிந்திக்க வேண்டும் என்றார்.

English summary
DMDK supremo Vijayakanth told that DMK head Karunanidhi and CM Jayalalithaa are cheating people that is why they are not able to come to power continuously.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X