For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் மோசடி: பி.ஆர்.பி உள்ளிட்ட குவாரி அதிபர்கள் வீடுகளில் சோதனை

By Chakra
Google Oneindia Tamil News

PR Palanichamy
மதுரை: மதுரை மற்றும் மேலூரில் கிரானைட் குவாரி உரிமையாளர்களின் வீடுகள், உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த திமுக, பார்வர்ட் பிளாக் அரசியல்வாதிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, இ.மலம்பட்டி, செம்மணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்த முன்னாள் கலெக்டர் சகாயத்தின் அறிக்கையையடுத்து கிரானைட் குவாரிகளில் கடந்த 12 நாட்களாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

பல குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டுவிட்டது. சட்டவிரோதமாக அரசு கனிமங்களை திருடியது, ஆவணங்களை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் 12 கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி இப்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதாகத் தெரிகிறது. அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மருமகன் மகாராஜன், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குனர் துரை தயாநிதி (மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன்), நாகராஜ், சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ், மதுரா கிரானைட் அதிபர் பன்னீர் உள்ளிட்ட 18 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

இந் நிலையில் தாங்களை கைது செய்யாமல் இருக்க பிஆர்பி மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி மதிவாணன், அடுத்த விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். அதுவரை இடைக்கால முன் ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந் நிலையில் நேற்று 3-வது முறையாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தினார்.

மேலும் இன்று அதிகாலை 4 மணி முதல் மதுரை, மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரி அதிபர்கள், உறவினர்கள் வீடுகளில் தனிப்படை போலீசார் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.

மதுரை அண்ணா நகரில் உள்ள பி.ஆர்.பழனிசாமியின் வீட்டில் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. அவரது மகள் சிவரஞ்சனி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். லேக் ஏரியாவில் உள்ள பி.ஆர்.பழனிசாமியின் மைத்துனர் முருகன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

மேலூரில் பி.ஆர்.பி. கிரானைட் அலுவலகம் மற்றும் அங்கு பணிபுரியும் உயர் அதிகாரிகள் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.

மேலூரில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சண்முகவேல் (65) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சண்முகவேல் மதுரை கனிம வள உதவி இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவரிடம் தனிப்படை போலீசார் கிரானைட் மோசடி குறித்து நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அதே போல மதுரா கிரானைட் அதிபர் பன்னீர் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதே போல மேலூர் தி.மு.க. நகர செயலாளர் முகமது இப்ராகிம் சேட்டின் வீடு, கிரானைட் அதிபர் பெரியசாமியின் லாட்ஜ் மற்றும் மதுரை பி.பி.சாவடியில் உள்ள பார்வர்டு பிளாக் பிரமுகர் தினகரன் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலூர் பாரதியார் புரத்தை சேர்ந்த பி.எஸ். கிரானைட் அதிபர் பெரியசாமியின் வீட்டில் நடந்த சோதனையில் துப்பாக்கி, மற்றும் 10 தோட்டாக்கள் சிக்கின.

English summary
The Madurai rural police is conducting raids on Madurai and Melur quarry owners homes over the granite stone scam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X