Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழிந்து வரும் மேற்கு தொடர்ச்சி மலை வனபகுதி: கண்டுகொள்ளுமா அரசு?

Subscribe to Oneindia Tamil

Western Ghats
குற்றாலம்: நெல்லை மாவட்டத்தின் வளம் மிக்க பகுதியும், கேரளா எல்லையுமான கடையநல்லூர், மேக்கரை, செங்கோட்டை, குற்றாலம், பழைய குற்றாலம், கடையம், மத்தளம் பறை பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஈத்தல் என்றழைக்கப்படும் மூங்கில் தொடர்ந்து வெட்டப்படுவதால் நீர்பிடிப்பு குறைவதுடன், யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக-கேரள மாநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வரும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அரிய வகை மிருகஙகளையும், மரங்களையும், மூலிகைச் செடிகளையும் கொண்ட இயற்கை வளம் மிக்க பகுதியாகும். இங்கு யானை, சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி போன்ற மிருகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. மேலும் பறக்கும் அணில் போன்ற அபூர்வ வகை அணில்களும், பலதரப்பட்ட பறவைகளும் உள்ளன. ஏராளமான அருவிகளும், நதிகளும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை நமக்கு தந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். ஆனால் சமீபகாலமாக மேக்கரை, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயற்கை வளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

அபூர்வ வகை மரம், மூலிகைச் செடிகள் தீ உள்ளிட்ட சக்தியாலும், சமூக விரோத கும்பல்களாலும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் யானை, மான், மிளா போன்ற உயிரினங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. காடுகளை பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர் முழு ஈடுபாட்டோடு செயல்படாததாலும், பல நேரங்களில் காட்டை அழிப்பவர்களோடு கைகோர்த்து செயல்படுவதாலும் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் காடுகளின் பரப்பளவு 33 சதவீதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு மளமளவென குறைந்து தற்போது 18 சதவீதமாக உள்ளதாக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காடுகளை பாதுகாக்கவும், காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் ஜப்பான் நாட்டு நிதியுதவியோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த டிஏபி எனப்படும் காடுகள் பாதுகாப்பு திட்டமும் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் குறைந்து, மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாகி வருகிறது. காடுகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்விற்காகவும், வருமானத்திற்காகவும் காடுகளை நம்பி இருந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பிற்கு திட்டமிடப்பட்டது. அதாவது அவர்கள் காடுகளை நம்பி இல்லாமல் வேறு சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இத்திட்டம் கடையநல்லூர், செங்கோ்ட்டை, தென்காசி பகுதியில் சரிவர செயல்படுத்தப்படாததால் காடுகள் தொடர்ந்து அழிந்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, மேக்கரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூங்கில் அதிகம் வளர்ந்துள்ளது. இந்த வகை மூங்கில் யானைகளுக்கு உணவாவதுடன் நீர்பிடிப்புக்கு அதிகம் துணை செய்கிறது. இதனால் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் கோடை காலத்திலும் தண்ணீர் இருக்கும். இவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் உள்பட எந்த மிருகமும் ஊருக்குள் வராமல் இருந்தன. ஆனால் தற்போது இந்த வகை மூங்கில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களால் அதிக அளவு வெட்டப்பட்டு வருகிறது. அங்கு வளரும் மூங்கில்கள் ஜவுளிக் கடை பைகளுக்கு கைப்பிடியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக அங்குள்ள மூங்கில்களுக்கு சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் மூங்கில் அதிக அளவுக்கு வெட்டப்பட்டு செங்கோட்டை பகுதிகளிலேயே சைஸ் செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மூங்கில் வெட்டப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளோடு, வனத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் பல ஆண்டுகளாக இந்த தொழில் தொய்வில்லாமல் நடந்த வண்ணம் உள்ளது. வேலியே பயிரை மேய்வதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆண்டுதோறும் இப்பகுதியில் மழை அளவு குறைந்து வருவதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து தமிழக அரசுக்கு அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளிக் கடை பைகளுக்கு பயன்படும் இந்த மூங்கில்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காடுகளில் வளர்ந்துள்ள மூங்கில்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மலையடிவாரங்களில் உள்ள தென்னை, வாழை தோட்டங்களை அழித்து வருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் விவசாய நிலங்களுக்குள் மிருகங்கள் புகாத வண்ணம் சுமார் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்வேலியும் செயல் இழந்து விட்டதால் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கேரள வனத்துறையும், தமிழக வனத்துறையும் இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி அழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் வாழ்விடம் அழிக்கப்படுவதால் யானைகள் மனிதர்களின் வாழ்விடங்களை அழிக்கும் நிலை உருவாகி வருவதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+