அஸ்ஸாமில் சட்ட விரோதமாக குடியேறிய 60,000 வங்கதேசத்தினரை திருப்பி அனுப்ப நடவடிக்கை
குவஹாத்தி: அஸ்ஸாம் கலவரத்தையடுத்து சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்க தேசத்தினரை கண்டுபிடித்து அவர்களை திருப்பி அனுப்பி வைக்கும முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அஸ்ஸாம் இனக்கலவரத்தில் இதுவரை 91 பேர் பலியாகியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு தூப்ரி மாவட்டத்தின் பகாரிடோல் கிராமத்தில் ஒருவரும், பார்பேட்டாவில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் நேற்று இரவு கோக்ரஜார் மாவட்டத்தில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பார்பேட்டாவில் 25 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. அங்கு வெடித்த கலவரத்தில் 28 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறையை அடக்க மாநில போலீசாருடன் ராணுவ அதிகாரிகளும் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகாய் கூறுகையில், ராணுவம் எங்களுக்கு உதவி வருகிறது. மாநிலத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள ஆயதங்களை பறிமுதல் செய்ய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோக்ரஜார், தூப்ரி, பொங்கைகாவ்ன், சிராங், பக்சா மற்றும் நல்பாரி ஆகிய 6 மாவட்டங்களில் சுமார் 2,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த 6 மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் உள்ளதா என்று ராணுவத்தினர் நேற்று முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள வங்க தேசத்தினரை கண்டுபிடித்து வெளியேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சுமார் 60,000க்கும் அதிகமான வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் அஸ்ஸாமில் குடியேறியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக மத்திய-மாநில சட்ட-அமலாக்க பிரிவினர் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தினரை கண்டுபிடித்து அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர். சட்டவிரோதமாக தங்கியிருந்த 83,000 பேரில் 23,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர்.
கடந்த 2011ம் ஆண்டில் 21,000 வங்கதேசத்தினர் முறையான விசா பெற்று இந்தியாவுக்கு வந்தனர். ஆனால் அவர்களில் 6,000 பேர் விசா காலம் முடிந்தும் இங்கு தங்கியுள்ளனர். அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் கலவரத்தை அடுத்து மாயமாகியுள்ளனர். உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையினரால் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதே போன்று ஆப்கானிஸ்தானை சேர்ந்த 41,060 பேர், பாகிஸ்தானை சேர்ந்த 24,047 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த 6,263 பேர் முறையான விசா மூலம் இந்தியா வந்துள்ளனர். விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தவர்களில் 110 ஆப்கானிஸ்தானியர்கள், 78 பாகிஸ்தானியர்கள் மற்றும் 308 இலங்கைகாரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ளவர்களை தேடும்பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications