அதிமுக ஆட்சிக்காலத்தில் 'எலி'மயமான எதிர்காலம்தான் கிடைக்கும்: விஜயகாந்த் 'வறுவல்'

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:
தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 சதுர அடி பரப்பளவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு ஏற்கனவே பேரவையில் கூறியதுதான். ஆனால் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் மின்வெட்டு, லஞ்சம், அரசு மருத்துவமனையில் சுகாதாரமின்மை, மணல் கொள்ளை நடைபெறுகிறது. மக்களின் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிக்கப்படுகிறது.
நானும் ஜெயிலுக்குப் போறேன்...
பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாராளுமன்றத்தை பாரதீய ஜனதா கட்சி முடக்குகிறது. 8 நாட்களாக முடக்கிவிட்டோம் என்று அந்த கட்சியின் தலைவர்கள் பேட்டி கொடுக்கிறார்கள். இதற்கு மத்திய அரசும், பிரதமரும் யார் மீதும் மானநஷ்ட வழக்கும் தொடுக்கவில்லை.ஆனால் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் பற்றி கூறியதால் என் மீது மான நஷ்ட வழக்கு போடுகிறார்கள். ஜெயிலுக்கு செல்ல அஞ்சுபவன் நான் அல்ல
எலிமயமான எதிர்காலம்
அதிமுக ஆட்சியில் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று அமைச்சர் முனுசாமி கூறியுள்ளார். நிச்சயம் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கப் போவதில்லை. எலிமயமான எதிர்காலம்தான் கிடைக்கும். ஒரு குழந்தையை எலி கடித்த பிறகுதான் மருத்துவமனையை அமைச்சர் பார்வையிட்டு, நாய், பூனை, எலிகளைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பே அமைச்சர்கள் மருத்துவமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்க வேண்டாமா?
புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றவற்றை மருத்துவமனையாக மாற்றப் போவதாகக் கூறி வருகின்றனர். அதை மாற்றுவதற்குப் பதில் இப்போது இருக்கும் மருத்துவமனைகளை சுகாதாரமாக இயங்கச் செய்யுங்கள். மின்சாரம் இல்லாததால் தமிழகம் இருள்மயமாக உள்ளது. நெசவாளர்கள், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜேப்பியாருக்கு ஒரு நியாயம்? பத்மா பள்ளிக்கு ஒரு நியாயம்?
பத்மா சேஷாத்ரி பள்ளியில் நீச்சல் குளம் அமைத்ததே சட்டவிரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் அரசு அந்தப் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஜேப்பியார் மீது நடவடிக்கை எடுத்தது. இது என்ன நியாயம் என்றார் அவர்.
நிதி உதவி
இந்நிகழ்ச்சியில் சென்னை கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் எலி கடித்த குழந்தையின் குடும்பத்துக்கு தேமுதிக சார்பில் ரூ.25 ஆயிரத்தை விஜயகாந்த் வழங்கினார்.












Click it and Unblock the Notifications