இந்திய விமானப்படை விமானிகள் 2 பேருக்கு தலா ரூ.50,000 பரிசளித்த சீன பாதுகாப்பு அமைச்சர்

சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜென் லியாங் குவாங் லீ 22 அதிகாரிகளுடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். மும்பையில் வந்திறங்கிய அவர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். டெல்லியில் லீ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி உள்பட பலரை சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார். அவர்கள் இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க பாதுகாப்பு அமைச்சகம் விமானம் அளித்தது.
அவர்கள் மும்பையில் உள்ள எலிபென்டா குகைகள், ஆக்ராவில் உள்ள தாஜ் மகால் மற்றும் டெல்லியில் உள்ள குதூப் மினார் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். குவாங் லீ மற்றும் அதிகாரிகள் இன்று அதிகாலை சீனா திரும்பினர். முன்னதாக குவாங் லீ மும்பையில் இருந்து டெல்லி சென்றதும் தன்னையும் பிற அதிகாரிகளையும் சிறப்பு விமானத்தில் அழைத்துச் சென்ற 2 விமானிகளிடம் இரண்டு கவர்களை கடந்த திங்கட்கிழமை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
வெளிநாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் விமானிகளுக்கு டை உள்ளிட்ட சிறு அன்பளிப்புகள் அளிப்பதுண்டு. அப்படி நினைத்து அந்த கவரைப் பெற்ற 2 விமானிகளும் அதைத் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த கவர்களில் தலா ரூ.50,000 ரொக்கம் இருந்தது. உடனே அவர்கள் இது குறித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்தனர். இறுதியில் அந்த ரூ.1 லட்சம் அரசு கஜானாவில் செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications