மமதாவின் அதிரடியால் மைனாரிட்டி அரசாகிப் போன ஐ.மு. கூட்டணி

இது தொடர்பாக நிதிசென்ட்ரல் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியுடனான உறவு முறிந்துபோய்விட்டது! என்பதை ஒருவழியாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அறிவித்துவிட்டார். மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் உட்பட 6 அமைச்சர்களும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நாளை ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க உள்ளனர். இதேபோல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் நாளை அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் கடிதமும் கொடுக்கப்பட இருக்கிறது.
டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு மமதா கெடு விதித்திருந்தார். கெடு முடிந்ததும் மமதா பானர்ஜி என்ன முடிவெடுப்பார்? 72 மணி நேர கெடுவுக்குள் வழக்கம் போல சமாதானாமாகிவிடுவாரா? என்ற பல்வேறு யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மமதா பானர்ஜியின் அறிவிப்பு வெளியானது. அரசிலிருந்து விலகிக் கொண்டது மட்டுமின்றி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதும்கூட காங்கிரஸ் தலைமையோ பிரதமர் மன்மோகன்சிங்கோ எதிர்பாராத ஒன்றுதான். கடந்த 3 ஆண்டுகளாக மமதா கடைபிடித்து வரும் "மிரட்டல்" பாணி அரசியல் என்றுதான் கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்சி வைத்தியம் இது!
ஒவ்வொரு முறையும் மமதா பானர்ஜி மிரட்டும்போது அவரை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இம்முறை மமதாவின் கோரிக்கையை ஏற்று டீசல் விலையை சிறிதுகூட குறைக்க பிரதமர் தயராக இல்லை என்பதும் ஆச்சரியமான ஒன்று!
அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி 3 முக்கிய விஷயங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
- மத்திய அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த மமதா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியை முதல் முறையாக மிகக் கடுமையாக பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலை மறைக்கும் வகையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது என்பதுதான் பொதுமக்கள் பலரது கேள்வியாக இருக்கிறது.
- மமதா பானர்ஜி முன்வைத்த மற்றொரு விவகாரம்.. கறுப்புப் பணம் பற்றியது. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மத்திய அரசு இந்தியாவுக்குக் கொண்டுவரவில்லை. பினாமிகள் பெயரிலான சொத்துகள் மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இது நேரடியாக காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சாடுவதாகவே பார்க்கப்படுகிறது. மேலும் கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரசின் முதல் குரலாகவும் இது கருதப்படுகிறது
- காங்கிரஸ் கட்சி பிளாக்மெயில் அரசியல் செய்கிறது என்றும் போட்டுத் தாக்கியிருந்தார் மமதா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் எங்களுடன் பிரச்சனை என்றால் மாயாவதியிடம் ஓடும். மாயாவதியிடம் பிரச்சனை என்றால் முலாயமிடம் செல்வார்கள். திமுகவுடன் பிரச்சனை எனில் அண்ணா திமுகவை நாடும் இப்பொழுது இந்த ஆட்டம் முடிந்துவிட்டது என்றும் காட்டம் காட்டியிருந்தார்.
இப்பொழுது மமதாவின் ஆட்டத்தால் மத்திய அரசு பெரும்பான்மையை இழந்து நிற்கிறது. பகுஜன் சமாஜ் அல்லது சமாஜ்வாதி ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளக் கூடும். உண்மையில் மமதா பானர்ஜி விலகியதால் மத்திய அரசு நிலையற்றதாகத்தான் இருக்கிறது. மமதாவின் முடிவால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது இன்னொரு தேர்தலை விரைவில் சந்திக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறது.
இதனிடையே திமுகவும் முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலானா கூட்டணிக் கட்சிகள் விலகிச் சென்றுவிட்டன என்றே அர்த்தம். இப்பொழுது தேசியவாத காங்கிரஸ் மட்டும்தான் கூட்டணிக் கட்சியாக இருக்கிறது.
மமதாவின் நடவடிக்கையால் இடைத்தேர்தல் வருமா? அல்லது வரும் நாட்காளில் அரசியல் கட்சிகளின் அணிசேர்க்கையில் மாற்றம் வருமா? என்ற கேள்விதான் இப்பொழுது இருக்கிறது.












Click it and Unblock the Notifications