மமதா வாபஸ் -ஜெ. மெளனம் ஏன்?: வருமா புதிய கூட்டணி?

காங்கிரஸ் தொடர்பான ஜெயலலிதாவின் நிலை தெளிவற்ற ஒன்றாகவே ஆரம்பத்திலிருந்து இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில் சோனியா காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் ஜெயலலிதா. பின்னர் அந்த நிலையிலிருந்து திடீரென மாறினார். கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்திய அமைச்சரவையில் முக்கியப் பதவிகள் கிடைக்காத ஆத்திரத்தில் கூட்டணியை விட்டு திமுக விலகும் அளவுக்கு நிலைமை இருந்தது.
அப்போது, திமுக ஆதரவை வாபஸ் பெற்றால் காங்கிரஸுக்கு அதிமுக ஆதரவு தரத் தயார் என்று அதிரடியாக அறிவித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் இதுதொடர்பாக அவர் பேசுவதையே தவிர்த்து வந்தார். சமீப காலமாக மத்திய அரசுக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான விமர்சனங்களை வைக்காமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் மமதா பானர்ஜி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டுள்ளது குறித்து ஜெயலலிதா கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறார்.
நேற்று காலையில் டெல்லிக்குப் புறப்பட்ட ஜெயலலிதாவிடம் மமதா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதுகுறித்து பின்னர் சொல்கிறேன் என்று பதிலளித்தார். ஆனால் இதுவரை மமதா விவகாரம் குறித்து அவர் பதில் ஏதும் தரவில்லை.
இதனால் பல்வேறு ஊகங்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன. அவர் தேசிய அளவில் மமதா பானர்ஜி கட்சியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு வருகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அவர் பாஜக அழைப்பு விடுத்த பாரத் பந்த்தில் இணையவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.
தேசிய அளவில் மமதா பானர்ஜி, நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து அவர் செயல்படக் கூடும், ஏற்கனவே ஜெயலலிதா முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு வீணாகிப் போன 3வது கூட்டணிக்கான முயற்சிகளை அவர் மறுபடியும் தொடங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அடுத்த லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் ஆட்சி அமைப்பதில் வரலாறு காணாத குழப்பம் ஏற்படும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. எனவே அந்த சமயத்தில் தன்னை ஒரு பலமான தலைவராக காட்டிக் கொள்ள ஜெயலலிதா முயலக் கூடும். அதற்காக அவர் மமதாவுடன் கூட்டணி சேரவும் தயங்க மாட்டார் என்று கருதப்படுகிறது.
அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை - இது ஜெயலலிதாவே சில வருடங்களுக்கு முன்பு சொன்ன வார்த்தைதான்.












Click it and Unblock the Notifications