திக்விஜய்சிங்குக்கு எதிராக அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் நிதின்கட்காரி வாக்குமூலம்

நிதின் கட்காரியும் அவரது பார்ட்னரான அஜய் சஞ்செட்டியும் சத்தீஸ்கர் மாநில நிலக்கரி சுரங்கங்கள் மூலம் ரூ490 கோடி லாபமடைந்தனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் குற்றம்சாட்டி வந்தார்.
இதை எதிர்த்து திக்விஜய்சிங் மீது நிதின்கட்காரி டெல்லி பெருநகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் சுதேஷ் குமார் முன்பு ஆஜரான கட்காரி, தொடர்ச்சியாக திக்விஜய்சிங் இப்படி பேசிவருவதாக வாக்குமூலம் அளித்தார். கட்காரியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட போது செய்தியாளர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
"அஜய்செட்டி என்பவருடன் நிதின் கட்காரிக்கு எந்த ஒரு வர்த்தக தொடர்பும் கிடையாது. அவர் மூலமாக எந்த ஒரு ஆதாயத்தையும் கட்காரி அடைந்தது இல்லை இது தொடர்பாக திக்விஜய்சிங்குக்கு செப்டம்பர் 14-ந் தேதியே நோட்டீஸ் அனுப்பியும் பதில் தரவில்லை" என்று கட்காரியின் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் வாதிட்டார்.
நீதிமன்றத்தில் இன்று கட்காரியின் வாக்குமூலம் மட்டும் பதிவு செய்யப்பட்டது. வரும் 16-ந் தேதி சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்படும். அதன் பின்னரே இந்த அவதூறு வழக்கில் திக்விஜய்சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்.
இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த திக்விஜய்சிங், இதனை தாம் வரவேற்கிறேன். கட்காரியின் வர்த்தக விவகாரங்களை சேகரித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications