இந்த சகோதரிக்கு வெற்றி தராமல் வேறு யாருக்கு தருவார்கள் மக்கள்?... ஜெ.
புரட்சித் தலைவருக்கு நான் அளித்த வாக்குறுதியை என் மனசாட்சிக்கு சரியென்று தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றி வந்திருக்கிறேன் என்ற மன நிறைவும், நிம்மதியும் இந்த நாளில் எனக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது, தமிழகம் இந்திய அளவில் தலை நிமிர்ந்து முதலிடம் பெறும் நோக்கில் எண்ணற்ற திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன்.
தமிழ்நாட்டில் புரட்சித் தலைவரும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும் அமல்படுத்திய பல திட்டங்கள் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ‘மக்கள் பணியே மகேசன் பணி' என்ற அண்ணாவின் அறிவுரையின்படி ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத் திட்டங்களை நான் செயல்படுத்தி வருகிறேன். எனக்கு எந்த சுயநல நோக்கமும் கிடையாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்.
எனவேதான் ‘உங்களுக்காக நான், உங்களால் நான்' என்பதை என் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கிறேன். இந்த நாட்டையே சூறையாடும் வண்ணம் பல்வேறு துறைகளில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்தவர்களையும், தேச அரங்கில் தமிழகம் தலைகுனியும் வகையில் வரலாறு கண்டிராத ஊழல்களில் ஈடுபட்டவர்களையும், முன்னேற்றப் பாதையில் தமிழகம் செல்ல முடியாத வகையில் முட்டுக்கட்டை போட்டவர்களையும் மக்கள் தேர்தல் களத்தில் புறக்கணித்தார்கள்.
மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பிலும், பேராசையிலும் தீய சக்திகள் மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன. தமிழக மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்த உண்மை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகளையும், மக்கள் நலப் பணிகளையும் மனதில் கொண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை தமிழக மக்கள் என்னிடம் வழங்கி இருக்கின்றார்கள். இன்னும் பல வெற்றிப் பரிசுகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை நன்றியோடு உணர்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் சத்துணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி உதவி, பல லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம், ஏழை எளிய பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற நலத் திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புரட்சிகர திட்டங்கள், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை எல்லோரும் பெற்றிட உலக அதிசயமாய் விலையில்லா மடிக்கணினி என்று பல முன்னோடித் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இது தொடரும்.
இவற்றின் வழியாக தமிழக மக்களின் வாழ்வு மலரும்; அதற்கு என்னுடைய ஆட்சி எந்நாளும் துணை நிற்கும் என்ற உறுதிமொழியை இந்த நல்ல நாளில் உங்கள் வாயிலாக தமிழக மக்களுக்கு அளிக்கிறேன்.
இந்த நன்னாளில் ஈட்டிய வெற்றிகளின் எண்ணிக்கையையும், நாம் எதிர் கொண்டு சாய்த்திட்ட எதிரிகளின் கணக்கையும் கூட்டிப்பார்த்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இந்த ஒப்பற்ற இயக்கத்தின் வளர்ச்சிக்காக தங்கள் வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட செயல் வீரர்களையும், வீராங்கனைகளையும், கழகத் தொண்டாற்றிய காலத்திலேயே தங்கள் விலை மதிப்பற்ற உயிரையும் நீத்திட்ட உத்தமத் தொண்டர்களின் உயரிய தியாகங்களையும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறேன்.
எத்தகைய உயர்ந்த நோக்கங்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டதோ; எத்தகைய எதிர்பார்ப்புகளோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரித்து வளர்த்து வருகின்றார்களோ; அவற்றிற்கு உண்மையாக விளங்கும் வகையில் தொடர்ந்து கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளே!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 41-ஆவது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி அளவிலும்; இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும் ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி கழகக் கொடியினை ஏற்றி வைத்து, விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications