தமிழகத்தில் பேரூராட்சிகளில் 1286 காலி இடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ப நகர கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி, சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின்படி, நகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் அகற்றுதல், சுகாதாரம், மழைநீர் வடிகால், சாலைகள், தெருக்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த முதல்வர் உத்தரவி்ட்டுள்ளார். இதற்காக நிதியை ஒவ்வொரு ஆண்டும் அவர் விடுவித்து வருகிறார். இதன் அடிப்படையில் பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டில் (2012 -13) ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த, சென்னை தவிர பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு ரூ.500 கோடியும், பேரூராட்சிகளுக்கு ரூ.250 கோடியும் என்று மொத்தம் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், நிர்வாக அமைப்பை முறைப்படுத்தி வலுப்படுத்தும் வகையிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1,286 பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் 2015ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் பொது இடங்களில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு புதிய பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கவும், தற்போது உள்ள கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி ஆகிய பணிகளுக்காக கடந்த 2011- 2012ம் ஆண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.19.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துவக்கப்பட்டது.
இதன் மூலம் 52 பேரூராட்சிகளில், 52 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டதுடன் 62 பேரூராட்சிகளில் உள்ள 75 சுகாதார வளாகங்கள் புனரமைக்கப்பட்டன. அதேபோல் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 658 கழிவறைகள் புனரமைக்கப்பட்டதுடன் மற்றும் புதியதாக 253 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆண்டு (2012-2013) மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பொது கழிப்பிடங்களை மேம்பாடு செய்யவும் மற்றும் புதிய பொது கழிப்பிடங்களை கட்டுவதற்கும், அரசு மானியமாக ரூ.36 கோடியே 30 லட்சமும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 15 லட்சமும், அடிப்படை கட்டமைப்பு நிதியை ஈடு செய்வதற்கான பங்களிப்பு தொகையின் கீழ் ரூ.18 கோடியே 15 லட்சமும் என்று மொத்தம் ரூ.72 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications