சட்ட மாணவர்கள், பஸ் ஊழியர்கள், போலீசார் மோதல்.. கதிகலங்கிய பாரிமுனை: தவித்த மக்கள்
சென்னை: சென்னை பாரிமுனைப் பகுதியில் பஸ் ஊழியர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பஸ் ஊழியர்கள் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.
நேற்று மாலை 4 மணிக்கு சென்னை பெரியார் நகரில் இருந்து மாநகர பஸ் ஒன்று பிராட்வே நோக்கி வந்தது. அந்தப் பஸ்சில் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். இதைப் பார்த்த டிரைவர் அவர்களை உள்ளே வருமாறு கூறி திட்டியுள்ளார். இதையடுத்து அவர்கள் டிரைவருடன் சண்டையில் குதித்தனர். அவர்கள் அனைவரும் சட்டக் கல்லூரி மாணவர்கள்.
இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்ததும், அங்கு ஏற்கனவே காத்திருந்த சட்டக் கல்லூரி மாணவர்களையும், பஸ்சில் வந்த மாணவர்கள் குழு சேர்த்துக் கொண்டு டிரைவருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலின்போது, பஸ் டிரைவர் சிவாஜி மற்றும் கண்டக்டர் ரமேஷ் ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் சிவாஜிக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்து பஸ் நிலையத்தில் இருந்த மற்ற பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள், போக்குவரத்து ஊழியர்கள் திரண்டு வந்து மாணவர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபடத் தயாரானார்கள். தகவல் அறிந்து போலீஸாரும் விரைந்து வந்தனர்.
டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்யக் கோரியும் பஸ் ஊழியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர். பிராட்வேயில் இருந்து பஸ்களை வெளியே எடுக்க மறுத்தனர். பாரிமுனையை சுற்றி உள்ள அனைத்து ரோடுகளிலும் பஸ்களை குறுக்கே நிறுத்தினார்கள்.
இதனால் பாரிமுனை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வடசென்னை பகுதி முழுவதும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எங்கும் போக முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் சட்ட மாணவர்கள், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம், போலீஸார், போக்குவரத்து ஊழியர்களின் மோதலாக மாறத் தொடங்கியது. இதையடுத்து கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோரும் பிராட்வே விரைந்தனர்.
ஆனால் அவர்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டனர். தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என்றும், அன்றாடம் பஸ் ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும், பஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அதுவரை பஸ்கள் ஓடாது என்றும் ஊழியர்கள் ஆக்ரோசமாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்டதாக சட்டக்கல்லூரி மாணவர்கள் கந்தன், விஜயகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் பஸ் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
திருப்பூரிலும் பஸ் ஊழியர்கள் போராட்டம்
இதற்கிடையே, அரசு பஸ் டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூரில் அரசு பஸ்களை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆங்காங்கு பஸ்களை நிறுத்தி திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் நேற்று திருப்பூர் வீரபாண்டியில் இருந்து வஞ்சிப்பாளையம் செல்லும் நகர பஸ்சில் பணியில் இருந்தார். நேற்று மதியம் 12 மணிக்கு திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது தனியார் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்தாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் தனியார் பஸ் முன் பஸ்சை நிறுத்தி தனியார் பஸ் டிரைவருடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது பஸ் நிலைய பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் ஜெயக்குமார் சமரசம் செய்து வைத்தார். அப்போது அரசு பஸ் டிரைவருக்கும் போலீஸ்காரர் ஜெயக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரசு பஸ் டிரைவரை போலீஸ்காரர் தாக்கியதாக தெரிகிறது. இதைபார்த்த சக தொழிலாளர்கள் சேர்ந்து போலீசாரை தாக்கியதாக தெரிகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போக்குவரத்து தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.டி.ஓ. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை மன்னிப்பு கேட்க வைப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என உறுதி அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து போராட்டத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனால் 3 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications