லாபம் பார்க்காமல் உழைப்பவர்கள் திமுகவின் 'ரத்த நாளங்கள்': கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தன்னால் இந்த இயக்கத்துக்கு என்ன லாபம் என்று நினைப்பவர்கள் தான் திமுகவின் ரத்த நாளங்கள் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.

மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ சைதை கிட்டுவின் மகன் திருமணம் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசுகையில்,

அருமைத் தம்பி சைதை கிட்டுவின் புகழை, பெருமையை, வீரத்தை எல்லாம் எண்ணி எண்ணி அகமகிழ்கிறேன்.

சைதை கிட்டுவும், நானும் எந்த அளவு உடன் பிறவா சகோதரர்களாக இருந்தோம், எந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் நேசித்தோம் என்பதை எல்லாம் எங்களை உணர்ந்தவர்கள் உணர்வார்கள்.

சைதை கிட்டு என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவர் என்பதற்கு அடையாளமாகத் தான் தன்னுடைய மகனுக்கு கருணா என்ற பெயரை வைத்திருக்கிறார். கருணாநிதி என்று முழு பெயரையும் வைக்க வேண்டுமென்று எண்ணினாலும், என்னிடத்திலும், அவரிடத்திலும் 'நிதி' இல்லாத காரணத்தால் (பெரும் கைதட்டல் காரணமாக சிறிது நிறுத்தி) நான் என்னிடத்திலும், அவரிடத்திலும் என்று தான் சொன்னேன்- மற்றவர்களையெல்லாம் குறிப்பிடவில்லை (மீண்டும் கைத்தட்டல்). அந்தக் காரணத்தினால் கருணா என்ற அளவோடு தன்னுடைய மகனின் பெயரை சூட்டி அழைத்தார்.

கருணாநிதி என்று ஏன் முழுப் பெயரைச் சூட்டி அழைக்கவில்லை என்று கேட்டால், அது தலைவர் பெயரை நான் கூறினேன் என்ற தவறுக்கு ஆளாகி விடுவேன் என்று அவர் பல நேரங்களிலே சொல்லியிருக்கிறார்.

கிட்டுவை நாங்கள் பறி கொடுத்த போது என் மனம் என்ன பாடுபட்டது என்பதை என்னோடு இருந்தவர்கள் தான் அறிவார்கள். கிட்டு என்று சொன்னால் எல்லாமே கிட்டும்- கிட்டு என்று சொன்னால் கிட்டாதது எல்லாம் கிட்டும், கிட்டு என்று சொன்னால் எட்டாதது எல்லாம் எட்டும். அப்படிப்பட்ட வல்லமையும் ஆற்றலும் திறனும் கொண்ட ஒரு மாவீரரைத் தான் இந்த இயக்கம் பெற்றிருந்தது.

இன்று இங்கு நடைபெற்ற காதல் கலப்பு திருமணம், எங்கே சாதி உயர்ந்தது என்று குறிப்பிடப்பட்டதோ அந்த சாதியை சேர்ந்த தாரிகா திராவிட சாதியை சேர்ந்த கருணாவை கரம் பிடித்து அனைவரின் வாழ்த்தையும் பெற்றுள்ளார்.

இது ஒரு ஆரிய- திராவிட கலப்புத் திருமணம். ஆரியர் கொள்கை வேறு, திராவிட கொள்கை வேறு. திராவிட எண்ணங்கள், பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் அளவு காலம் மாறியிருக்கிறது. சாதி வேற்றுமை அகலும் காலத்தை உருவாக்கக் கூடியது இளைஞர்கள் தான்.

சைதை கிட்டுவால் இந்த இயக்கம் எத்தகைய வளர்ச்சி பெற்றது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். எத்தனையோ பேர் இந்த இயக்கத்துக்காக பாடுபட்டு இருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக விளங்கும் தகுதி கிட்டுவை போன்ற சிலருக்குத்தான் உண்டு. அவர் எதற்கும் அஞ்சாத மனிதர். நெருக்கடி கால சோதனையின் போது எங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து எங்களையும், இயக்கத்தையும் காத்த பெருமை அவருக்கு உண்டு.

இந்த இயக்கத்திலே அப்படிப்பட்ட மாவீரர்கள் இன்னும் தோன்ற வேண்டும் என்ற அவா மிகுதி உடையவன் நான். ஒரு இயக்கத்தில் கிட்டுப் போன்றவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் இந்த இயக்கத்திற்கு என்ன செய்தார்கள் என்பது தான் கேள்வியே, அந்தக் கேள்விக்குக் கிடைக்கின்ற பதில் தான் இந்த இயக்கத்தை வளர்க்கக் கூடியதா அல்லது வீழ்த்தக்கூடியதா என்பதை அறுதியிட்டுக் கூறுகின்ற நிலையிலே அமையக் கூடியது என்பதையும் நான் பல நேரங்களிலே எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

நான் அடிக்கடி சொல்வது உண்டு. உன்னால் இந்த இயக்கத்திற்கு என்ன லாபம்? என்று கேட்டு விட்டு நான் சொல்வேன், பல நேரங்களில்- ஒரு இயக்கத்தில் தன்னால் அந்த இயக்கத்திற்கு என்ன லாபம் என்று கருதுகிறவன் தான் அந்த இயக்கத்தை வளர்க்கின்ற, அந்த இயக்கத்திற்கு உயிர் தருகின்ற ரத்த நாளம்.

இயக்கத்தால் தனக்கு என்ன லாபம் என்று வருந்தி பெருமூச்சு விடுகிறவன் அந்த இயக்கத்திற்குப் புற்று நோய் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ரத்த நாளங்களில் ஒருவராக நம்முடைய தம்பி கிட்டு அவர்கள் இருந்தார்கள். அந்த ரத்த நாளம் தான் இடையிலே சில ஆண்டுகளுக்கு முன்பு நாமெல்லாம் கலங்குகின்ற அளவிற்கு, நாம் பெருமூச்சு விடுகின்ற அளவிற்கு நம்மை விட்டு விலகியது, நம்மை விட்டுப் பிரிந்தது.

பிரிந்தாலும் கூட இங்கே நண்பர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப் போல நிழலாக நம்மோடு இருக்கிறார் கிட்டு. அவருடைய துணிவு நமக்குத் துணையாக இருக்கின்றது. அவருடைய அன்பு நம்மை விட்டு அகலாமல் இருக்கிறது. அவருடைய தொண்டுள்ளம் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கிட்டு ஒரு சாதாரணத் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி, அண்ணாவின் தம்பியாக வாழ்ந்தவரே, பெரியாரின் தொண்டனாக இருந்தவரே, எங்களுக்கு எல்லாம் உற்றத் தோழராக விளங்கியவரே, என்று பாராட்டக் கூடிய அளவிற்கு அவர் நம்முடைய மனதிலே நிழற் படமாக ஆகியிருக்கிறார் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+