ராஜிவ், சோனியா, நரசிம்மராவ், சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் 'சர்ச்சை ஜாம்பவான்' மணிசங்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே இப்படியெல்லாம் காங்கிரஸ் தலைவர்களை, காங்கிரஸ் கட்சி அமைச்சர்களை விமர்சனம் செய்ய முடியுமா? என வியக்க வைக்கும் அளவுக்கு தடலாடியாக சாடிப் பேசி சர்ச்சைகளில் சங்கமிப்பவர் மணிசங்கர் அய்யர். தற்போது நாடாளுமன்றத்தில் கூச்சலிடும் எம்பிக்களை ' கிணற்றுக்குள் இருந்து ஓலமிடும் விலங்குகள்' போல என விமர்சித்திருப்பது மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு போயிருக்கிறது! இதற்கு முன்பும் மணிசங்கர் அய்யர் சிக்கிய சர்ச்சைகள் என்ன? பார்ப்போம்

மணிசங்கர் யார்- சர்ச்சையான அறிமுகம்

மணிசங்கர் யார்- சர்ச்சையான அறிமுகம்

தமிழகத்தைச் சேர்ந்த மணிசங்கர் அய்யர், நாட்டின் வெளியுறவுத் துறையில் 25 ஆண்டுகாலம் பணியாற்றியவர். பின்னர் ராஜிவ் காலத்தில் காங்கிரஸில் ஐக்கியமானார். பின்னர் எம்.பி. தேர்தலில் சீட் கிடைக்காமல் போக திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவி மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட 'தில்' கொண்டவர். ஆனால் அங்கு டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வி அடைந்தவர்தான் இந்த மணிசங்கர் அய்யர். காங்கிரஸ் மேலிடத்தின் புண்ணியத்தில் தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்.

அந்தமானில் சாவர்க்கர் பொன்மொழி நீக்கம்

அந்தமானில் சாவர்க்கர் பொன்மொழி நீக்கம்

2004-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர், அந்தமான் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள செல்லுலார் சிறை கல்வெட்டு ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாவர்க்கரின் பொன்மொழியை நீக்க அவர் உத்தரவிட்டார். அவ்வளவுதான் நாடாளுமன்றத்தை சிவசேனாவும் பாஜகவும் முடக்கி வைக்க பாஜக எம்.பிக்களோ அந்தமானுக்கே பறந்து சென்று போராட்டம் நடத்தினர். இத்தகைய ஒரு பெரும் சர்ச்சையின் 'கதாநாயகனே' சாட்சாத் மணிசங்கர்தான்!

காமென்வெல்த் போட்டியே தேவையில்லை....

காமென்வெல்த் போட்டியே தேவையில்லை....

2010-ம் ஆண்டு டெல்லியின் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற போது மணிசங்கர் அய்ய அடித்த கூத்துகளுக்கு பஞ்சமே இல்லை! காமன்வெல்த் போட்டியை நடத்திய மத்திய அரசும், டெல்லி அரசும் காங்கிரஸ் அரசுகள்தான்! ஆனால் மணிசங்கர் சொன்னது என்ன தெரியுமா? "காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் மழையால் பாதிக்கப்படுவது மகிழ்ச்சி. காமன்வெல்த் போட்டி வெற்றி பெற்றால், மிகுந்த வருத்தம் ஏற்படும். இந்த போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி விட்டால், இதைத்தொடர்ந்து ஏஷியன் கேம்ஸ், ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளை இந்தியாவுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.நாட்டில் 90 சதவீத குழந்தைகள் விளையாடுவதற்கான அடிப்படை சூழலே இல்லாதபோது, காமன்வெல்த் போன்ற சர்க்கஸ்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி செலவழிப்பது தேவையற்றது" என்று ஒரே அதிரடியாக போட பெரும் சர்ச்சை வெடித்தது.

பின்னர் "காமன்வெல்த் போட்டியை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இனி வாயைத் திறக்கமாட்டேன்" என்று பல்டி அடித்தவரும் மணிசங்கர்தான்!

ப.சிதம்பரத்துடன் மோதல்

ப.சிதம்பரத்துடன் மோதல்

காமன்வெல்த் போட்டி குறித்து கருத்து தெரிவித்து கலாட்டா செய்த மணிசங்கர் அய்யர், காமன்வெல்த் ஊழல் வெளியான போது நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பற்றியும் விமர்சித்து சலசலப்பை உருவாக்கினார். "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு ஒதுக்கப்படும் மானியத்தை விளையாட்டுத் துறையே நேரடியாக ஒதுக்கீடு செய்து வந்தது. இதனால் முறைகேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் பொதுநிதி விதி மீறப்படுகிறது என்று சுட்டிக்காட்டி அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு பல கடிதங்கள் எழுதினேன். ஆனால் அவர் எனது கடிதத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார் மணிசங்கர் அய்ய.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் மீது அதே காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் முன்வைத்த விமர்சனம் அதிரடியைக் கிளப்பியது.

பாபர் மசூதியை இடித்த நரசிம்மராவ்

பாபர் மசூதியை இடித்த நரசிம்மராவ்

காங்கிரஸ் நிர்வாகத்தை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரை விமர்சித்த மணிசங்கர் இன்னும் ஒருபடி மேலே போய் காங்கிரஸ் அரசின் பிரதமராக இருந்த நரசிம்மராவை 'மதவாதி'யாக விமர்சித்தார். டெல்லியில் காங்கிரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் என்பது குறி்த்த '24, Akbar Road' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பாபர் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணம் நரசிம்ம ராவ் தான். மதசார்பின்மை என்ற விஷயத்திலேயே அவருக்கும் காங்கிரசுக்கும் பிரச்சனை இருந்தது. நான் ராம்-ரஹீம் யாத்திரை நடத்தியபோது என்னிடம் பேசிய ராவ், மதசார்பின்மை என்ற கொள்கையே தனக்குப் புரியவில்லை என்றும். இந்தியா ஒரு இந்து தேசம் என்றே தான் கருதுவதாகக் கூறினார் எனவும் அதிரடியாக கூறிய போதும் சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது.

ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு கூடாது

ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு கூடாது

காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே இருந்து கொண்டு இஷ்டத்துக்கு பேசிவரும் மணிசங்கர், அக்கட்சியின் தலைவரான ராஜிவை கொன்றவர்களை தூக்கிலிட வலியுறுத்தி வருகிறது. ஆனால் சர்ச்சை ஜாம்பவான் மணிசங்கரோ, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் அதற்கு பதிலாக அவர்கள் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்றார். சும்மா இருப்பார்களா காங்கிரஸ் தொண்டரடிப்பொடிகள்! தோள் தட்டி, தொடை தட்டி புஜம் தூக்கி கண்டனக் கணைகள் தெரிவித்தனர்..

சோனியா தலைமைக்கு எதிராக போர்க்கொடி

சோனியா தலைமைக்கு எதிராக போர்க்கொடி

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்ற சொல்லாடலுக்கு சரியான உதாரணம் மணிசங்கர்... காங்கிரஸ் நிர்வாகம், அமைச்சர்கள், பிரதமரை விமர்சித்த மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் தலைமையையும் விட்டு வைக்கவில்லையே! தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், இந்திராவின் காலத்திற்கு பிறகு, காங்கிரஸ் கட்சி பெரும்சரிவை சந்தித்தற்கு காரணம், கட்சி தொண்டர்களிடையேயும், கட்சி மூத்த தலைவர்களிடையேயும் ஒருங்கிணைப்பு இல்லாததே தற்‌போது உட்கட்சி ஜனநாயகமும் காங்கிரஸில் இல்லை. கட்சியின் தலைமைப் பொறுப்பில் சோனியா குடும்பத்தை சேர்ந்தவர்களே வருகின்றனர்... மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று பொரிந்து தள்ள, 'காங்கிரஸின் துரோகி', 'மனநோயாளி' போன்ற பட்டங்களை சுமந்து அதே காங்கிரஸில் இன்னமும் நீடித்து வருகிறார் மணிசங்கர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+