பிளாஸ்டிக் பக்கெட்டை உடைத்ததாக ஆசிரியர்கள் அடித்ததில் 4ம் வகுப்பு மாணவன் பலி
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை உடைத்ததாக் கூறி 10 வயது மாணவனை ஆசிரியர்கள் அடித்ததில் அவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
மத்திய பிரதேச மாநிலம் பெடுல் மாவட்டம் பத்தகேடாவில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தவன் அஸ்லம் அன்சாரி(10). கடந்த மாதம் 16ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுவன் அங்கிருந்த பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றை உடைத்துவிட்டான் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் பிர்ஜு சொனாரியா மற்றும் விஜய் ராம் பகத் ஆகியோர் அஸ்லமை சிறுவன் என்று கூட பார்க்காமல் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் சிறுவனின் முதுகெலும்பு உடைந்தது. இதையடுத்து அவனை போபாலில் உள்ள ஹமீதியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிரியர் பிர்ஜுவை கைது செய்தனர். ஆனால் இன்னொரு ஆசிரியரான விஜய் ராம் பகத் தலைமறைவாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications