டெல்லியைப் போல புதுவையிலும் பயங்கரம் - +2 மாணவி பலாத்காரம்! இருவர் கைது-மக்கள் கொதிப்பு!

சம்பவம் என்ன?
புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் திருபுவனை வழியாக வில்லியனூர் வரும் தனியார் பேருந்தில் தினமும் தனி வகுப்புக்காக வந்து சென்றுள்ளார். அப்போது பேருந்து நடத்துநர் முத்து என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இதனிடையே நேற்று முன் தினம் தனது தோழியைப் பார்க்க அவர் வில்லியனூர் சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருபுவனை, வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், நேற்று தமது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அந்த மாணவி விழுப்புரம் அருகே தாம்இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, பெற்றோர் அங்கு சென்று மாணவியை மீட்டனர். மாணவியின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், அவரை புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மருத்துவமனையில் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
மாணவி விளக்கம்
வில்லியனூர் சென்றுவிட்டு, வீடு திரும்ப மாணவி வழக்கமான தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் முத்து, மாணவியின் தாயாருக்கு உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அவரை விழுப்புரத்தில் சேர்த்திருப்பதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய மாணவியும் நடத்துநருடன் சென்றுள்ளார்.விழுப்புரத்தில் ஓரிடத்தில் பேருந்தில் இருந்து இறங்கி, அருகேயுள்ள வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த வெங்கடாசலபதி வந்ததாகவும், இருவரும் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாணவி போலீசில் புகார் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து முத்து, வெங்கடாசலபதி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகவும் அவரையும் கைது செய்ய வலியுறுத்தி இன்று திருபுவனையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் புதுச்சேரி- விழுப்புரம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications