ஊராட்சிக்குப் பெயர் சூட்டுவதில் தகராறு... நெல்லை அருகே போலீஸ் மீது கல்வீச்சு
நெல்லை: நெல்லை மாவட்டம் பழவூர் அருகே ஒரு ஊராட்சிக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மோதலை அடக்க போலீஸார் முயன்றபோது அவர்கள் மீது ஒரு தரப்பினர் கல்வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரம் - யாக்கோபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற பெயர் வைப்பது தொடர்பாக 2 தரப்பினர் இடையே கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்த ஊராட்சிக்கு சிதம்பராபுரம் ஊராட்சி என பெயர் சூட்ட இந்துக்களும், யாக்கோபுரம் என்ற பெயர் சூட்ட கிறிஸ்தவர்களும் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக கோர்ட் வரை பிரச்சினை போனது. அடிக்கடி மோதல்களும் நடப்பது வழக்கம்.
இதனால் யாருக்கும் வேண்டாம் என்று, சிதம்பராபுரம் - யாக்கோபுரம் ஊராட்சி என்ற பெயரை அரசு சூட்டியது. இந்த நிலையில், நேற்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் வெள்ளை அடிப்பதற்காக கம்பு கட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த யாக்கோபுரம் பகுதியினர் ஊராட்சி மன்ற பெயரை மாற்றுவதற்குதான் ஏற்பாடு நடக்கிறது என எண்ணி திரண்டு வந்தனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களைக் கலைந்து போகுமாறு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, போலீசார் ராஜு, ராஜசேகரன் ஆகியோர் கூறினர். ஆனால் அவர்கள் மீது யாக்கோபுரத்தைச் சேர்ந்த சிலர் கல்வீசித் தாக்கினர். இதில் போலீஸார் மூவரும் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கல்வீசித் தாக்கியவர்களை தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர். இந்த மோதல் தொடர்பாக 130 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து 10 பேரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications