விஜயகாந்த் மீது ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கு அரசாணைக்கு ஹைகோர்ட் தடை: அரசுக்கு நோட்டீஸ்

எதிர்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தமிழகத்தில் தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். தமிழக அரசும் அவர் எந்தெந்த பகுதியில் பேசுகிறாரோ அந்தந்த பகுதியில் அவர் மீது அவதூறு வழக்குகள் தொடர்ந்துவருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி திண்டுக்கலிலும், அதே மாதம் 26ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்திலும் மற்றும் அதே மாதம் 30ம் தேதி விழுப்புரத்திலும் பேசிய விஜயகாந்த் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக தாக்கிப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த 3 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரலாம் என்று தனித்தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்குகளில் விஜயகாந்த் ஜனவரி 9ம் தேதி அதாவது இன்று திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் செஷன்ஸ் நீதிமன்றங்களிலும், வரும் 11ம் தேதி கடலூர் செஷன்ஸ் நீதிமன்றத்திலும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 3 அரசாணைகளையும் ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் விஜயகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதி என். பால்வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி கடலூர் பேச்சு குறித்த அரசாணைக்கு தடைவிதித்துவிட்டு மற்ற இரண்டு அரசாணைகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியது தொடர்பான மனு குறித்து பதில் அளிக்குமாறும், திண்டுக்கல் மற்றும் விழுப்புரம் கூட்டம் குறித்த அரசாணைகள் தொடர்பாக பதில் அளிக்குமாறும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications