மார்ச் 21-ல் தமிழக அரசு பட்ஜெட் - வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுகிறது!

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி தொடங்கியது. மரபுப்படி கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் கே.ரோசய்யா சட்டசபையில் உரை நிகழ்த்தினார்.
அதன்பிறகு 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 5 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடந்தது. கடைசி நாளான 8-ந்தேதி உறுப்பினர்களின் விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். பிப்ரவரி 8-ந்தேதியுடன் சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
21-ந்தேதி பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கவர்னர் கே.ரோசய்யா வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கூட்டி உள்ளார்.
அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு 2013-2014-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் நேற்று வெளியிட்டார்.
சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழுவினர் கூடி இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம்? என்பது குறித்து முடிவு செய்வார்கள்.
பட்ஜெட் விவாதம்
முதலில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடக்கும். அதன்பிறகு பட்ஜெட் உரை மீதான உறுப்பினர்களின் விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். அதைத்தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். பட்ஜெட் கூட்டத்தொடர் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3-வது பட்ஜெட்
இந்த பட்ஜெட், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் 3-வது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் 2013-2014-ம் நிதி ஆண்டில் தமிழக அரசு நிறைவேற்ற உள்ள புதிய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் இடம்பெறும்.
கல்வி, சுகாதாரம், மின்சாரம், விவசாயம், போக்குவரத்து, தொழில் உள்ளிட்ட துறைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
குறிப்பாக வரிச்சலுகைகள் அதிக அளவில் இருக்கும் என்கிறார்கள். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் இது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications