சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

'ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி' என்ற மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் கோயம்பேடு செயின்ட் தாமஸ் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்களும் மாணவிகளும் இன்று காலை 11 மணியளவில் பச்சையப்பன் கல்லூரி வாயிலில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் எனவும், இலங்கைப் போரில் இந்தியாவின் பங்கு குறித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அப்போது திடீரென மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தத் தொடங்கியது.
கீழ்ப்பாக்கம் ஜி 3 காவல் நிலைய ஆய்வாளர் பரமசிவம் தலைமையில் சுமார் 50 பேர் கொண்ட போலீஸ் படை மாணவர்கள் மீது தடியடி நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஏழுமலையை போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றது. இதனால் மாணவர்கள், 'ஏழுமலையை விடுதலை செய்ய வேண்டும்' என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் திரண்டு போராட ஆரம்பித்தனர். உடனே ஏழுமலை விடுவிக்கப்பட்டார்.
மாணவர் போராட்டங்களில் இதுவரை எந்த வன்முறையும் இல்லை. மாணவர்களும் அமைதியான முறையிலேயே போராடி வருகின்றனர். அரசுத் தரப்பும் இதுவரையிலும் போராட்டங்களை அனுமதித்து வந்த நிலையில் இன்று காவல்துறை தடியடி நடத்திய சம்பவம் போராடும் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தடியடியின் காரணமாக காயமடைந்த மாணவர் ஏழுமலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரூண் எம்.பி அலுவலகத்திற்கு பூட்டு
இதனிடையே தேனியில் காங்கிரஸ் எம்.பி. ஆரூண் அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் பூட்டு போட்டனர். ராஜபக்சேவின் கைக்கூலி ஆரூண்..இனத் துரோகிக்கு இங்கு வேலை இல்லை, இலங்கைக்கு ஓடிவிடு.. என்று கோஷமிட்டு ஆரூண் உருவப்படத்தை கொளுத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications