ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு... கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வைகோ உள்ளிட்ட 750 பேர் கைது
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 750 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் 40 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர் என்பது புகார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷவாயு பரவியதில் தூத்துக்குடி நகர் முழுவதும் ஏராளமான மக்கள் மூச்சுத்தினறல் ஏற்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது என்பது பல்வேறு அரசியல் கட்சியினரின் புகாராகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், மீனவர்சங்கம், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 750க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இது கட்சி, மதம், ஜாதி சார்பற்ற போராட்டம். ஸ்டெர்லைட் ஆலையினால் 40 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது மக்களைக் காக்கும் போராட்டம்.
இந்த ஆலையை மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. தற்போது தடை ஆணை பெறப்பட்டு வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த ஆலையில் இருந்து தினமும் நச்சுப்புகை வெளியேறிக் கொண்டு இருக்கிறது. இதனை மக்கள் சுவாசித்து வருகிறார்கள். இந்த ஆலை இருக்கும் ஒவ்வொரு நாளும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
சில தினங்களுக்கு முன்பு வெளியான நச்சுப்புகையால் தூத்துக்குடியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கண்கள் எரிச்சலும் அச்சமும் ஏற்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் மூடி மறைத்து விட்டது. மாவட்ட நிர்வகமும், ஆட்சியரும் ஸ்டெர்லைட் ஆலையில் ஊதுகுழலாக செயல்படுகின்றனர் என்றார்.
முற்றுகைப் போராட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல், பாத்திமா பாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலை கழக அம்புரோஸ், மண்டல தலைவர் குமார், பயணிகள் நலச்சங்க தலைவர் கல்யாணசுந்தரம், வணிகர் பேரவை மாநில துணை தலைவர் பொன்.தனகரன், மாவட்ட செயலாளர் ஈசுவரன், பொருளாளர் பெருமாள், தியாகி பொன்னையா பிள்ளை, ஷாஜகான், சம்சுதின், வீராங்கனை அமைப்பு மனோன்மணி, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வருகிற 28ந் தேதி ஸ்டெர்லைட் ஆலை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications