மதுரையில் குண்டு வைத்து அத்வானியை கொல்ல முயன்ற வழக்கு: மேலும் 3 பேர் கைது
மதுரை: கடந்த 2011ம் ஆண்டில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மதுரை வந்தபோது அவரை குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு ரத யாத்திரை சென்ற பாஜக மூத்த தலைவர் அத்வானி அதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கும் வந்தார். அவர் மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக தென்காசி செல்லவிருந்தார். அப்போது அவர் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு திருமங்கலத்தை அடுத்து உள்ள ஆலம்பட்டி பாலம் பகுதியில் பைப் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வழியாக அத்வானி வரும்போது அவரை கொல்லும் திட்டத்துடன் தான் வெடிகுண்டு வைக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். மேலும் போலீஸ் பக்ருதீன் உள்பட 9 பேரை தேடி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் தலைமறைவாக உள்ளவர்களில் 3 பேரை இன்று கைது செய்தனர். மதுரை நெல்பேட்டை தர்வீஸ் மைதீன் (44), வில்லாபுரம் 'பேக்' கடை செய்யது (35), குப்புப் பிள்ளை தோப்பு பகுதியைச் சேர்ந்த முஸ்தபா (26) ஆகியோர் தான் இன்று கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications