அத்வானியை கொல்ல முயன்ற வழக்கு: மதுரையில் மேலும் ஒருவர் கைது

கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் யாத்திரை மேற்கொண்ட எல்.கே.அத்வானி தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் மதுரையில் இருந்து தென்காசி செல்ல இருந்தார். அப்போது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்தின் கீழ் பைப் வெடிகுண்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அத்வானியின் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கில் அவரை கொல்ல இந்த குண்டு வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அத்வானி பைபாஸ் வழியாக விருதுநகர் சென்று அங்கிருந்து தென்காசி சென்றார்.
இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான போலீஸ் பக்ருதீன் உள்பட சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி போலீஸ் பக்ருதீன் அண்ணன் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், வில்லாபுரம் சையது சகாபுதீன், முஸ்தபா ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் பர்மா காலனியை சேர்ந்த ஜாகிர்உசேன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பைப் வெடி குண்டு வைக்க உதவி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பைப் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications