புதுக்கோட்டை: 3 வயது குழந்தை 7 பவுன் நகைக்காக கழுத்தை அறுத்து கொலை
புதுக்கோட்டை: 7 பவுன் நகைக்காக 3 வயது குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாய்பு. இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகளுடன் இங்கு தனியாக வசித்து வருகிறார்கள். இவரது கடைசி மகள் சஹானா (வயது 3). இவள் நேற்று மாலை வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது, திடீரென மாயமானாள்.
சஹானாவை காணாததால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் பரபரப்புடன் தெரு மற்றும் அக்கம் பக்கத்தினரிடமும் தேடியும், விசாரித்தும் குழந்தையை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதற்கிடையே கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் இரவு 9 மணி அளவில் கழுத்து அறுபட்ட நிலையில் குழந்தை ஒன்று பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணமாக கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றினார்கள். இதையடுத்து குழந்தையின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு வந்த உறவினர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தது சஹானா என்று அடையாளம் காட்டினர். குழந்தையின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மேலும் அவள் விளையாடிக்கொண்டு இருந்த போது 7 பவுன் நகை அணிந்திருந்ததாகவும், அந்த நகை மாயமாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவலை வைத்து நகைக்காக குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். இதனை மறைப்பதற்காக குழந்தையின் உடலை கடலில் வீசியதும் தெரிய வந்தது. கடலில் வீசப்பட்ட குழந்தையின் உடல் அலையில் கரையில் ஒதுங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் தெரிந்த நபராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது சாய்பு வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மீனவர் போஸ் (32) என்பவர் தலைமறைவாகி இருந்தார். இதனால் அவர் குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்றும், அவரை கைது செய்யும் பட்சத்தில் இந்த சம்பவத்தின் உண்மை நிலை தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications