For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறைக்க எதுவும் இல்லையாம்.. ஆனால், ஜே.பி.சி. முன் மன்மோகன் சிங் ஆஜராக மாட்டாராம்!

By Chakra
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: 2ஜி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன் ஆஜராக முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டால், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி குற்றம் சாட்டியது.

இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட பலரை கைது செய்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டு குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தக் குழுவின் தலைவராக, காங்கிரஸ் எம்பியான பி.சி.சாக்கோ உள்ளார். இந்தக் கூட்டு குழு முன்பு ஆஜராகி தனது நிலையை தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆ.ராசாவின் கோரிக்கையை சாக்கோ நிராகரித்துவிட்டார்.

கூட்டுக் குழு முன் ஆஜராகி, தான் சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டுமென்று ஆ.ராசா பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பிரதமர், நிதியமைச்சருக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளைக் கூறுவார் என்பதே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சாக்கோ தனக்கு அனுப்பி வைத்த கேள்வி தொகுப்புக்கு பதில் அளித்து 17 பக்க கடிதம் ஒன்றை கூட்டு குழுவிற்கு ராசா அனுப்பி வைத்தார். அதில் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்குவது குறித்து பல முறை பிரதமருடன் விவாதித்து இருப்பதாக ராசா கூறியுள்ளார்.

இதனால் இந்த விவகாரத்தில் பிரதமருக்கும் தொடர்புள்ளதால், மன்மோகன் சிங்கும் கூட்டு குழு முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, பாஜக மூத்த தலைவரும், கூட்டு குழு உறுப்பினருமான யஷ்வந்த் சின்கா வற்புறுத்தி வருகிறார்.

இது குறித்து மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆ.ராசா எழுப்பிய குற்றச்சாட்டுகளில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள, கூட்டு குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், கூட்டு குழு முன் ஆஜராக வேண்டும் என்ற யஷ்வந்த் சின்காவின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்து விட்டார். யஷ்வந்த் சின்காவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், கூட்டு குழு முன் ஆஜர் ஆக முடியாது என்பதை திட்டவட்டமாக மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தனக்கோ அல்லது மத்திய அரசுக்கோ மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் மன்மோகன் சிங் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பிரச்சனையில் என்னென்ன ஆதாரங்கள் தேவை, யார், யாரை சாட்சிகளாக விசாரிக்க வேண்டும் என்பது பற்றி கூட்டுக் குழுவும், அதன் தலைவரும் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு புகார் குறித்து அரசிடம் இருந்த அனைத்து ஆவணங்களும் கூட்டு குழுவிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்று மன்மோகன் சிங் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

பிரதமர் நேரில் ஆஜராக வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டுக் குழுவின் சில கூட்டங்களை யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட 5 பாஜக உறுப்பினர்கள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேன் கூறுகையில், 2ஜி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால், ஜே.பி.சி. முன்பு பிரதமர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஜே.பி.சிக்கு காங்கிரஸ் எம்.பி. தலைமை வகிப்பதன் மூலம் அது காங்கிரஸ் கமிட்டியாகி விட முடியாது. பி.சி.சாக்கோ ஜே.பி.சியின் மாண்பை குலைக்கக் கூடாது என்றார்.

சிபிஐ வழக்கறிஞர் லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் இல்லை..

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ வழக்கறிஞராகப் பணியாற்றிய ஏ.கே.சிங், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவுடன் நடத்திய ரகசிய உரையாடல் அடங்கிய சி.டி. கடந்த ஆண்டு வெளியானது.

இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், ஏ.கே.சிங் லஞ்சம் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அவர் செய்தது விவேகமற்ற செயல் என்பதால், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Prime Minister Manmohan Singh rejected BJP's demand that he appear before the joint parliamentary committee probing the 2G scam, saying that all pertinent government records and documents are before the committee. Responding to BJP leader Yashwant Sinha's letter urging him to be a witness before the JPC and respond to allegations levelled by 2G accused and former telecom minister A Raja, the PM said the decision on who to call needs to be taken by the committee and its chair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X