டெல்லி மாணவி பலாத்கார குற்றவாளியின் கை முறிவு: சக கைதிகள் தாக்கியதாக புகார்
டெல்லி: டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கை உடைந்துள்ளது. விமானப்படைத் தேர்வு எழுத இருந்த நிலையில் சிறையில் சக கைதிகள் தாக்கி அவனது வலது கை எலும்பு முறிந்துவிட்டதாக வழக்கறிஞர் புகார் செய்துள்ளார்.
டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்கார கொலை வழக்கில் சிக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ராம் சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டான். முகேஷ், வினய் சர்மா, அக்ஷய் மற்றும் பவன் ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வினய் சர்மா விமானப்படையின் கிளார்க் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளான். அவனுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பயிற்சியாளரை வழங்க சிறை அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தான் தேர்வுக்கு படிப்பதால் பால், பழம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வினய் சர்மா புதிய மனு தாக்கல் செய்திருந்தான்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக டெல்லி நீதிமன்றத்தில் வினய் சர்மா நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தான். அவனது வலது கையில் மாவுகட்டு போடப்பட்டிருந்தது. அவனது வக்கீல் கூறுகையில்,ஏப்ரல் 7ம் தேதி நடக்க உள்ள விமானப்படை தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த வினய் சர்மாவை சிறையில் சக கைதிகளும், போலீசாரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். இதில், வினய் சர்மாவின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று புகார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications