மனதில் ஆசையை வளர்த்து, பரிதவிக்க விட்டு.. காதலனுக்கு அல்வா கொடுத்த காதலி!
நெல்லை: செல்போனில் மலர்ந்த காதலியை தேடி பரிசு பொருட்களுடன் ஆலங்குளம் வந்த சென்னை வாலிபருக்கு இளம் பெண் டிமிக்கி கொடுத்தார். இதனால் அந்த வாலிபர் பரிதாபத்துக்கு உள்ளானார்.
திருச்சி புதூர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் விஜய். இவர் சென்னையில் உள்ள ஐடி பார்க் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் விஜய் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசியவர் இளம்பெண் என்பது தெரிய வந்தது.
அவரது வசீகர குரலில் மயங்கிய விஜய் அந்த பெண்ணுடன் பேசி காதலை வளர்த்தார். அவரை நேரில் பார்க்க துடித்த விஜய் தனது ஆசையை இளம் பெண்ணிடம் தெரிவித்தார். அதற்கு அந்த பெண் தான் ஆலங்குளத்தில் வசிப்பதாகவும், நீங்கள் அங்கு வந்தால் உறவினர்களிடம் பேசி திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி ஒரு முகவரியை கொடுத்தார்.
இதையடுத்து விஜய் தனது காதலியை நேரில் சநதிக்கும் ஆவலுடன் மனதில் ஆசையை வளர்த்து கொண்டு பரிசு பொருட்களுடன் ஆலங்குளம் வந்தார்.
பேருந்து நிலையத்துக்கு வந்ததும் அவர் தனது செல்போனில் காதலியை தொடர்பு கொண்டார். அப்போது அந்த பெண் தான் தற்போது ஆலங்குளத்தில் இருந்து கம்பத்திற்கு சென்று விட்டதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறி செல்போனை துண்டித்துவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த விஜய் வீதியில் நின்று தனியாக புலம்பி தவித்தார். இளம்பெண் கொடுத்த முகவரிக்கு சென்று விசாரித்த போது அது போலி என தெரிந்தது. இது குறித்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications