ஸ்பெக்ட்ரம் ஊழல் ஜேபிசி வரைவு அறிக்கை லீக் ஆனது எப்படி? எதிர்க்கட்சிகள் கேள்வி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையானது எப்படி வெளியே கசிந்தது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான பார்லிமென்ட்டின் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய கூட்டுக் குழு விசாரணை நடத்தியது. இக்குழுவின் தலைவராக காங்கிரஸின் சாக்கோ இருந்து வந்தார். இந்தக் குழுவில் தாம் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு கோரியிருந்தார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா., இதேபோல் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும் என்று பாஜக கோரியிருந்தது. ஆனால் இந்த கோரிக்கைகளை சாக்கோ நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையில், பிரதமரை ஆ. ராசாதான் தவறாக வழிநடத்தினார் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கை என்பது பார்லிமென்ட்டின் சொத்து. எந்த ஒரு அறிக்கையும் உள்ளகக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு திருத்தப்பட்டு பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அதன் பின்னரே கருத்துகள் வெளியிடப்படும் நிலையில் ஜேபிசியின் வரைவு அறிக்கையின் அம்சங்கள் வெளியாகி இருப்பது மிகப் பெரிய விதிமீறலாகும் என்றார். மேலும் இந்த அறிக்கையானது பார்லிமென்ட் கூட்டுக் குழு அறிக்கையாக இல்லை.. காங்கிரஸ் கட்சியின் அறிக்கையாகவே இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதே போல் ஜேபிசி அறிக்கை கசிந்தது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications