பெங்களூரில் குண்டுவைத்தது சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்: கேரளாவில் பயிற்சி
சென்னை: பெங்களூர் குண்டுவெடிப்பை சிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் செய்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் கேரளாவில் பயிற்சி பெற்றதும் தெரிய வந்துள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பில் குண்டு வைக்கப்பட்ட பைக் நம்பர் பிளேட்டில் டி.என்.22 ஆர் 3769 என்ற பதிவு எண் இருந்தது. இதை வைத்து தமிழகம் மற்றும் கர்நாடக போலீசார் விசாரணையைத் துவங்கினர். சென்னை தில்லைகங்கா நகரைச் சேர்ந்த சுந்தர் என்பவர் யமஹா பைக்கை வாங்கியது தெரிய வந்தது.
சாப்ட்வேர் என்ஜீனியரான சுந்தர் அமெரிக்கா சென்றதால் அந்த பைக்கை சென்னையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு விற்றுள்ளார். அவர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு மாற்றலாகிச் சென்றார். சிறிது காலம் கரூரில் அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வந்த அவர் கடந்த 2011ம் ஆண்டே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சேடர் தெருவைச் சேர்ந்த தனியார் கல்லூரி நூலக உதவியாளர் கோபிநாத்திடம் விற்றுள்ளார். இப்போது இவர் தான் இந்த பைக்கை பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து கோபிநாத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசை திசை திருப்ப இந்த போலி பதிவு எண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே பெங்களூரில் குண்டு வைக்கப்பட்ட பைக் சுசுகி சாமுராய் வகையைச் சேர்ந்தது. ஆனால் தமிழகத்தில் இருப்பதோ யமஹா பைக். சம்பவ இடத்தில் இருந்த பைக் ஒசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை பெருங்களத்தூரில் உள்ள டீலர் ஒருவரிடம் அந்த பைக்கை பிரகாஷ் என்பவர் வாங்கியுள்ளார்.
பிரகாஷ் பின்னர் அந்த பைக்கை காஞ்சீபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு விற்றார். வேல்முருகன் அதை வேலூரைச் சேர்ந்த அன்வர் பாஷா என்னும் மெக்கானிக்கிற்கு விற்றார். அன்வர் அந்த பைக்கை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கு விற்றுள்ளார். இப்படி அந்த பைக் பல கைமாறி இறுதியில் தீவிரவாதிகள் கையில் கிடைத்துள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போலீசார் பைக் எப்படி தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு சென்றது என்பதை கண்டுபிடித்துள்ளனர். பைக்கை இறுதியாக பெங்களூரைச் சேர்ந்த ஒரு வாலிபர் போலி பெயர், முகவரியைக் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த போலி முகவரியில் பைக் வாங்கத் தேவையான ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் வாலிபருக்கும், வேலூர் வாலிபருக்கும் எப்படி அறிமுகம் ஏற்பட்டது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அன்வர் பாஷாவிடம் பெங்களூர் வாலிபரை எப்படி தெரியும் என்று கேட்டதற்கு அவர் சிலர் பெயர்களை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி போலீசார் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட், உமராபாத் ஆகிய இடங்களில் 5 பேரிடம் விசாரித்தனர். அதில் 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் தான் பெங்களூர் வாலிபருக்கு பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை நடந்த விசாரணையில் ஓரளவு துப்பு துலங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள சிமி இயக்க ஆதரவாளர்கள் மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து பெங்களூர் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளதை தேசிய புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்த பைக்கை தமிழகத்தில் வாங்கியுள்ளனர். தாக்குதல் நடத்த கேரளாவில் பயிற்சி பெற்றுள்ளனர். தாக்குதலை கர்நாடகாவில் உள்ள குழுவினர் செய்துள்ளனர். கேரளாவின் உட்பகுதியில் உள்ள சில உள்ளூர் தீவிரவாதிகளின் உதவியுடன் தான் இந்த பயிற்சி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பயிற்சிக்குத் தேவையான பணம் வளைகுடா நாட்டில் இருந்து ஹவாலா மூலம் கேரளாவுக்கு வந்திருக்கிறது என்று புலனாய்வு குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications