கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி பந்த்... இயல்பு வாழ்க்கை முடங்கியது.
திருப்பூர்: மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரியில் இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரு சில கல்வீச்சு சம்பவங்களைத் தவிர பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்பதால் காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நீலகிரி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மஞ்சுநாதன் கடந்த வாரம் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். இதேபோல் குன்னூரில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஹரிகரன், வெங்கட்ராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கடை அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

கோவையில் கடையடைப்பு
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள் குறைவான அளவே ஓடின. பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்பட்டன. பந்த் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 6 மணிக்கு மேல் இயல்பு நிலை திரும்பியது.

பஸ்மீது கல்வீச்சு
அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. நகர் முழுவதும் நேற்று இரவு முதலே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகன சோதனை நடைபெற்றது. எனினும் பேட்டையில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த பஸ் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் இருந்து காந்திபுரம், அப்ப நாயக்கன்பட்டி புதூரில் இருந்து உக்கடம் நோக்கி வந்த பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர்.

கைது எச்சரிக்கை
கோவை மாநகரில் கடையடைப்பை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வண்ணம் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக 200 சிறப்புக் காவல் படையினர் உளுந்தூர் பேட்டையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடையடைப்பை கட்டாயமாக வலியுறுத்தி மக்களுக்கு இடையூறு செய்வோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார்கள். மேலும், பிரச்னைக்குரிய வகையில் சுவரொட்டி ஒட்டுவோரும் கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.

பொள்ளாச்சியில் அச்சம்
பொள்ளாச்சியில் இன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. அதிகாலை 5.30 மணிக்கு பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அந்த பகுதியில் திறந்திருந்த பேக்கரிக்குள் புகுந்தனர். பேக்கரியை மூடச்சொல்லி எச்சரித்த அவர்கள் அங்கிருந்த பாட்டிலை தூக்கிப்போட்டு உடைத்தனர். பயந்து போன கடைக்காரர் உடனே கடையை மூடினார். அதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து இடத்தை காலி செய்தது.

கல்வீச்சில் காயம்
அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின. எனினும் ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த கல்வீச்சு சம்பவத்தில் 7 பஸ்கள் சேதமடைந்தன. இதில் சில பயணிகள் காயமடைந்தனர்.

கேரளா பேருந்துகள் நிறுத்தம்
தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பதட்டம் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல் அவை பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

சுற்றுலா பயணிகள் பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், அருவங்காடு, எலநல்லி, வெலிங்டன், மேல்குன்னூர், கோத்தகிரி, கொலக்கம்பை, சேலாஸ் ஆகிய பகுதிகளில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. உதகையில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. மார்க்கெட்டுகள் செயல்படவில்லை ஒரு சில பேருந்துகளைத் தவிர வாகன இயக்கம் முற்றிலும் முடங்கியதால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மாலையில் இயல்பு நிலை திரும்பியது.

சினிமா காட்சிகள் ரத்து
மேட்டுப்பாளையம், சிறுமுகையில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேட்டுப்பாளையம் நகரில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோவை, ஈரோட்டில் இருந்து ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சினிமா தியேட்டர்களில் காலை காட்சியும், மதிய சாட்சியும் ரத்து செய்யப்பட்டன.

திருப்பூரில் பாதிப்பு
பந்த் காரணமாக திருப்பூரிலும் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கவில்லை. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் நகர் முழுவதும் ரோந்து வந்தனர். பல்லடத்திலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது. மாலையில் இயல்பு நிலை திரும்பியது.












Click it and Unblock the Notifications