For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா, இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா, கிடைக்காதா?: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

Kuruvai cultivation: Karunanidhi questions ADMK govt.
சென்னை: இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தமிழக அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வழக்கமாக மேட்டூர் அணை இதே நாளில் தான் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிக்காகத் திறந்துவிடப்படும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு ஆண்டு கூட இந்த ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தொடரும் சோகமாகி விட்டது.

திமுக ஆட்சியில் கூட, சாகுபடிக்காக மேட்டூரில் தண்ணீர் திறந்து விடுவது ஜுன் 12ஆம் தேதி என்பது ஒரு சில ஆண்டுகளில் தள்ளிப் போயிருக்கலாம். ஆனால் 12ம் தேதிக்குப் பின்னர் ஒரு சில நாட்களுக்குள் மேட்டூர் அணை சாகுபடிக்காகத் திறந்து விடப்பட்டு விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்டுவிடும். ஆனால் கடந்த மூன்றாண்டு கால அதிமுக ஆட்சியை எடுத்துக் கொண்டால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் மட்டம் மிகவும் குறைந்து, வற்றி வறண்டிருக்கும் நிலையில் உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வது பற்றி மிகப் பெரிய குழப்பமும், பதற்றமும் நிலவுகிறது.

கடந்த ஆண்டு அணையின் நீர் மட்டம் 79 அடியாக இருந்த போதிலும், நீர்வரத்து போதுமான அளவுக்கு இல்லாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் ஏறத்தாழ 1.20 லட்சம் எக்டேர் என்ற இயல்பான பரப்பளவில், சுமார் 51 ஆயிரம் எக்டேரில் தான் நெல் சாகுபடி மேற்கொள்ள முடிந்தது. நிலத்தடி நீரை நம்பி ஏறத்தாழ 60 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற போதிலும், கடந்த ஆண்டு அதிமுக அரசு உறுதியளித்தபடி மும்முனை மின்சாரம் முழுமையாகக் கிடைக்காததால் குறுவை சாகுபடியின் பரப்பளவு பெரிதும் குறைந்தது. இந்த ஆண்டில், கடந்த ஆறு மாதங்களாகக் காவிரி வறண்டு கிடந்ததால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துவிட்டது.

அதிமுக ஆட்சியைப் பொறுத்தவரையில் தமிழக விவசாயிகளின் நலனை மட்டும் கருத்திலே கொண்டு, அண்டை மாநிலத்தோடு நல்ல வகையில் பேசி சுமூகமான முறையில் தேவையான நீரைப் பெற்றிட முயலாமல், எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதும், மத்திய அரசின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதும் என்ற போக்கிலே செயல்படுவதன் காரணமாக, உண்மையில் பாதிக்கப்படுவோர் தமிழ்நாட்டு விவசாயிகள் தான்!

எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதன் காரணமாக, கர்நாடக அரசு உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும், முன்னாள் முதலமைச்சர்களையும் அழைத்து இதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றினை நடத்தி அவர்களின் கருத்தினை அதாவது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்து விட்டதால், அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று இன்றைய தினம் டெல்லியில் கூடுகின்ற தற்காலிக காவிரிக் குழுவிடம் கேட்போம் என்று பேரவையில் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ஜுன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட வேண்டுமே, டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் செய்வதா, வேண்டாமா என்ற குழப்பத்திலே இருக்கிறார்களே என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து அரசின் சார்பில் அறிவுரை வழங்கப் பட வேண்டாமா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மத்திய அரசு காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பாராமுகத்தோடு இருக்கிறது என்றும், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

எனவே அதிமுக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி உண்டா? இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா? கிடைக்காதா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றியும்; விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றியும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi wants ADMK government to make it clear whether Kuruvai cultivation will start this year or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X