வெள்ளம்- குற்றாலம் அருவியில் தொடர்ந்து 3வது நாளாக குளிக்க தடை
தென்காசி: குற்றாலத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் கடந்த மாத இறுதியில் சீசன் துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அருவிகளுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடர்மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இன்று 3வது நாளாக தடை
மெயின் அருவில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுவதால் இன்று காலையில் 3வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பழைய குற்றலாத்திலும் தடை
ஐந்தருவியிலும், பழைய குற்றாலத்திலும் நேற்று ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இத்தடை இன்று இரு அருவிகளிலும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் இரண்டு அருவிகளிலும் குளித்தனர்.

23 நாட்களில் 6வது முறையாக வெள்ளம்
தொடர்ந்து மலைப்பகுதியில் சாரல்மழை வலுத்து வருவதால் அனைத்து அருவிகளுக்கும் வரக்கூடிய தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். அவ்வப்போது புலியருவியில் குளிக்க போலீசார் அனுமதித்ததால் அதில் மட்டும் குளித்து மகிழ்ந்தனர். கடந்த 23 தினங்களில் 6வது முறையாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications