ஸ்பெயினில் பச்சிளம் குழந்தையை கழிவுநீர் குழாயில் வீசிய தாய்: 30 மணிநேரம் தாக்குப்பிடித்த சேய்
மாட்ரிட்: ஸ்பெயினில் பச்சிளம் குழந்தையை கழிவுநீர் குழாயில் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவில் பெற்ற தாயே தனது குழந்தையை டாய்லெட்டில் போட்டுச் சென்ற சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு அதே போன்று ஒரு சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது.
கிழக்கு ஸ்பெயினில் உள்ள அலிகாண்டே என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் குழாயில் பூனை கத்துவது போன்று கேட்டுள்ளது.
உடனே அங்கு வசிப்பவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கழிவுநீர் குழாயில் பூனையல்ல தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் ஆண் குழந்தை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடலில் காயங்களுடன் இருந்த 2.1 கிலோ எடையுள்ள குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை கழிவுநீர் குழாயில் 30 மணிநேரமாக உயிருடன் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவம் நடந்த குடியிருப்பில் வசிக்கும் 26 வயது பெண்ணை குழந்தையை கொலை செய்ய முயன்றதற்காக போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications