உத்தரகண்டில் மீண்டும் பெருமழை... அலக்நந்தா ஆறு உடையும் அபாயம்!
டேராடூன்: பெருமழை புரட்டிப் போட்ட உத்தர்கண்ட் மாநிலத்தில் மீண்டும் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அங்கு வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மலைவாழ் மக்கள்தான் இதில் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கேதர்நாதத்துக்கு செல்ல புதிய வழித்தடத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கேதர்நாத் நகரில் நிவாரண பணி முடிய ஓராண்டு தேவைப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே பத்ரிநாத் நகருக்கு மீண்டும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அலக்நந்தா நதியில் ஒரு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பெரிய ஏரி போல மாறியுள்ளது. சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. முந்தைய மழையில் அடித்துவரப்பட்ட கட்டிட இடிபாடுகள் இதில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் கரை உடையலாம் என்று தெரிய வந்துள்ளது. ரிசாட்-1 செயற்கை கோள் எடுத்த படங்கள் மூலம் இந்த அபாயம் தெரிய வந்தது.
இதையடுத்து இஸ்ரோ நிறுவனம் உத்தரகாண்ட் மாநில அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தது. அதன் பேரில் பத்ரிநாத் நகரில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏரி குண்டு (லேக் பாம்ப்) என்று வர்ணித்துள்ள பேரிடர் மீட்புக் குழு, பத்ரிநாத்தில் தயார் நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications