பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை காட்டுமிராண்டித்தனமானது - வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko condemns BJP leader's murder
சென்னை: சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொடியோர் சிலரால் கோரமாக படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் தருகிறது. இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...

ஆடிட்டர் ரமேஷ் அவர்களை நான் நன்கு அறிவேன். கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, இனிமையாகப் பேசி அவர்களின் நேசத்தைப் பெற்ற நல்ல மனிதர் ஆவார். அவரோடு பலமுறை பேசிப் பழகி உள்ளேன்.

சேலத்தில் என் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் வாழ்த்தியதோடு, நீண்ட நேரம் உடன் இருந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பே அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு, அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வீட்டு வாசலில், அவர் கார் தீயிட்டு எரிக்கப்பட்டது.

கடந்த ஒன்றாம் தேதி வேலூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பனுக்கு, ஆடிட்டர் ரமேஷ் நெருங்கிய நண்பர் ஆவார். வெள்ளையப்பன் படுகொலைக்குப் பின்னர் ரமேசுக்கு தக்க பாதுகாப்பை காவல்துறை கொடுக்கத் தவறிவிட்டது.

தன் மனைவி, புதல்வியுடன் உணவு விடுதியில் உணவு அருந்திவிட்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அலுவலகம் சென்ற சிறிது நேரத்திலேயே ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை எண்ணும்போதே தாங்க முடியாத வேதனை செய்தியைப் படிக்கின்ற நமக்கே ஏற்படுகிறது என்றால், அவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள கொடுந்துயரை கற்பனைகூட செய்ய முடியவில்லை.

ஈவு இரக்கம் இல்லாமல் மனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆடிட்டர் ரமேசை படுகொலை செய்த கொடியவர்களை காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மூலம் கைது செய்து, குற்றக்கூண்டில் நிறுத்தி, தக்க தண்டனை கிடைக்க, உரிய நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும்.

ஈ, எறும்புக்குக் கூட தீங்கு செய்ய நினைக்காத, எவரிடத்திலும் கடிந்துகூடப் பேசாத பண்பாளரான நல்ல மனிதர் ரமேசை கொலை செய்த தீயவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது. தான் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய கொள்கைக்காக பாடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாத அராஜக ரத்த வெறிதான் இந்த கொடூரமான படுகொலைக்குக் காரணம் ஆகும்.

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, இந்து இயக்கங்களைச் சேர்ந்த 6 பேர் படுகொலைசெய்யப்பட்டு உள்ளனர். முக்கியத் தலைவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவங்கள் தொடர்வது மிகவும் அச்சத்தைத் தருகிறது. இத்தகைய கொலைவெறி அராஜகத்தை வளரவிடாமல் தடுக்கவும், காலம் காலமாக தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தைக் காக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தில் சமயம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும், கொள்கைகளிலும் கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமை ஆகும். கருத்தை, கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கொலைவெறி கத்தியால் அல்ல.

வேலூரிலும், சேலத்திலும் நடைபெற்ற சம்பவங்கள் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் தருவதால், பொது அமைதியை நிலைநாட்டவும், தங்களுக்கு விருப்பமான சமயக் கருத்துகளைக் கொண்டோர் பாதுகாப்பாக அச்சமின்றி வாழவும், தேவையான தக்க நடவடிக்கைகளை தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கோர மரணத்தில் பறிகொடுத்து, துயரத்தில் துடி துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத்
தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+