கேரளாவும், தமிழகமும் தனி நாடாக இருந்திருந்தால் ...அமர்த்தியா புத்தகம் பற்றி கருணாநிதி கருத்து

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
‘‘நோபல்'' பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, வெளிவந்துள்ள நூலினை அண்மையில் நக்கீரன் காமராஜ் தனது பிறந்த நாளினையொட்டி என்னிடம் அளித்தார். இவர்கள் எழுதிய ‘‘நிலையில்லா புகழ்-இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும்'' என்ற தலைப்பு கொண்ட அந்நூலில், பக்கம் 72-ல், ‘‘தெற்காசிய ஒப்பீடுகளில், இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாகக் கருதிப் பார்ப்போமேயானால், கேரளாவும், தமிழ்நாடும் மற்றெல்லா மாநிலங்களை விடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும்; உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்; இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான இந்த ஒப்பீடுகளில் இருந்து தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், பன்முகம் கொண்ட ஒரு நாடு, மிக வெற்றிகரமான செயலாக்கம்மிக்க அந்த நாட்டு மாநிலங்களில் இருந்து உருவாகும் அனுபவங்களிலிருந்தே படிப்பினைகளைப் பெற முடியும் என்று எழுதியுள்ளார்கள்.
இந்திய மாநிலங்களுக்கு இடையிலான வளர்ச்சி வேறுபாடுகளுடையது என்பதை விளக்குவதற்காக, ஏராளமான புள்ளிவிவரங்களை அமர்த்தியா சென் தனது நூலில் எடுத்துக்காட்டியிருக்கிறார். இந்தியாவின் மக்கள் தொகையில் சரிபாதியாக அதாவது 54.5 கோடி மக்கள் தொகை கொண்ட 7 பெரிய மாநிலங்களான பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் ஏழ்மை நிலை மிக அதிகமாக இருந்து வருகிறது. இவற்றில் சில மாநிலங்களில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் நிலவிவரும் வறுமை நிலைமையைவிட, மிகக் கொடுமையான நிலையே நீடித்து வருகிறது. ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளில் போதிய கவனமின்மை, பெண்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான பொறுப்பின்மை, இந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய பிரச்சினைகளாக இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
மக்களுடைய வாழும் சூழ்நிலைகளில் மேம்பாடு காண்பதற்குத் தேவையான இயற்கை வளங்களை மிக அதிக அளவில் பயன்படுத்துதல், மக்களின் ஈடுபாட்டை அதிகரித்தல் போன்றவற்றில் போதுமான முன்னேற்றம் இல்லை என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான மின்சாரம், கழிவுநீர் வசதிகள், போக்குவரத்து மற்றும் சுகாதாரம் ஆகிய பிரச்சினைகள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன என்று அமர்த்தியா சென் குறைபட்டிருக்கிறார்.
‘‘பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது எனினும், சர்வதேச ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கில்லை. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே உண்டு வருகின்றனர். மிகப் பெரிய மக்கள்தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும், இந்தியாவின் எதிரே உள்ள சவால்களாகும்'' என்றும்; ‘‘இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய நுட்பமான ஆய்வு இந்த நூலில் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் அளவற்ற வளத்தைப் பற்றியும், இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்திய நாட்டுப் பொருளாதாரத்தைப் பற்றிய ஆழ்ந்த சரியான விமர்சனமாக இந்த நூலை எடுத்துக்கொள்ளலாம். இந்த நூலில் இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்லாமல், அரசியல், வரலாறு மற்றும் சட்டத்தைப் பற்றிய நுணுக்கங்களும் விரிவாக கையாளப்பட்டுள்ளன'' என்றும்; இந்த நூலைப் பற்றி சில விற்பன்னர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய அளவில் இப்படிப்பட்ட கருத்துகளையெல்லாம் தொகுத்திருந்த போதிலும் நம்மைப் பொறுத்தவரையில் நான் முதலில் எழுதியவாறு; கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடாக இருந்திருந்தால், எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்க முடியும் என்ற கருத்தும்; மாநிலங்கள் அனைத்தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் தான் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன.
குறிப்பாக சேது திட்டம் போன்றவற்றை தடுக்க நினைக்காமல்; ஒட்டுமொத்தமாக அவற்றால் ஏற்படக்கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப்பார்த்து நிறைவேற்றிட அனைத்துத் தரப்பினரும் முன் வருவார்களேயானால் அமர்த்தியா சென் எழுதியிருப்பதைப்போல, நமக்கு எதிரே உள்ள சவால்களை சாமர்த்திய மாகப் புறந்தள்ளி முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வேகமாக அடியெடுத்து வைத்திட முடியும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications