இவை இலவசங்கள் அல்ல... சமூக, பொருளாதார வளர்ச்சிக்கான உதவிகள்! - ஜெயலலிதா

தேர்தல் அறிக்கைகள் தொடர்பான வழிமுறைகள் உருவாக்குவது குறித்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையொட்டி, தேர்தல் கமிஷன் கட்சிகளிடம் கருத்து கேட்டுள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேர்தல் அறிக்கைகள்
ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வரும் நேரத்தில் நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள், நோக்கங்கள், கொள்கைகளை உருவாக்குவதற்கு உரிமைகள் வழங்கப்படவேண்டும். இதேபோல, பொதுமக்களுக்கும் தாங்கள் விரும்பும் கொள்கைகளையும், பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்க உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் மூலமாக தங்கள் நோக்கங்களையும், விருப்பங்களையும் வெளிப்படுத்துவதற்கு கட்
டுப்பாடுகள் விதிப்பது ஒரு நல்ல சமூக அமைப்புக்கு பொருத்தமாக இருக்காது. பெரிய ஜனநாயக நாடுகள் எதுவும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை கட்டுப்படுத்தவில்லை. இந்தியாவும் அத்தகைய ஜனநாயக நாடுகளின் நடைமுறைகளை பின்பற்ற வகைசெய்ய வேண்டும்.
முன்னேற்றத் திட்டங்களுக்கு கட்டுப்பாடா?
தேர்தல் அறிக்கைகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்க்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் நோக்கத்திற்கு மதிப்பளிக்கும் நேரத்தில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவது என்பது எந்த வகையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு சாத்தியமாகும்.
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை தங்களின் வசதிக்கேற்ற வகையில் வெளியிட உரிமை வேண்டும். தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு உள்ள நேரத்தை கட்டுப்படுத்துவது அல்லது வழிமுறைகளை விதிப்பது என்பது சமுதாயத்தில் நலிந்த மக்களுக்கான முன்னேற்ற திட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதாகத்தான் அமையும்.
பலனைத்தான் பார்க்க வேண்டும்
நலிந்த மக்களுக்கு செய்யப்படும் உதவியை இலவசங்கள் என்று பார்க்கக்கூடாது. அத்தகைய உதவிகளுக்கு என்ன நோக்கம்?, அதன் பலன் என்ன? என்பதுதான் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் பெண்களுக்கு மிக்சிகள், கிரைண்டர்கள் வழங்குவது என்பது, அவர்களை மிக கடினமான வேலைகளில் இருந்து விடுவிப்பதாகும். இதுபோல, நலத் திட்டங்களின் கீழ், கால்நடைகள் வழங்குவது அவர்களுடைய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஒரு கிரியா ஊக்கியாகும். சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எந்த உதவியையும் இலவசங்கள் என்று கருதக்கூடாது.
இலவசங்கள் அவசியமானவையே
ஜனநாயகத்தில் மக்களுக்கு தங்களுக்கு எந்த தேர்தல் அறிக்கைகள் பலன் அளிக்கும் என்று தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருக்கிறது. அவர்கள்தான், எந்த அரசியல் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதை முடிவு செய்யும் சிறந்த நடுவர்கள் ஆவார்கள். ஜனநாயக உணர்வை நிலைநிறுத்த அரசியல் கட்சிகள் கூறும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை முடிவெடுக்க மக்களால்தான் முடியும்.தேர்தல் கமிஷன் போன்ற அதிகார அமைப்புகள், இதுகுறித்து முடிவெடுக்க அனுமதிக்கக்கூடாது.
தேர்தல் அறிக்கை தொடர்பாக, தேர்தல் நடத்தை விதிகள் மூலம் வழிமுறைகளோ, கட்டுப்பாடுகளோ விதிப்பது என்பது சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதாகத்தான் அமையும். மேலும், தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளாகவும் அமையும். இது ஜனநாயக உணர்வை குறைத்து மதிப்பிட்டு, சுதந்திரமான எண்ணங்களுக்கு விலங்கிடுவதாகும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications