பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடியாக: ஜெ. பெருமிதம்
சென்னை: பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து வன்கொடுமைகளையும் கண்டித்து வருவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் அதிகாரம் மற்றும் சென்னை மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரம் சார்பில் மாற்று வழி விவாத தீர்மான மையத்தின் விழா இன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் மாற்று தீர்வு மையத்தை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழ்நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தனான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துடன் இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்ற முதல் தமிழர் என்ற சிறப்பை அவர் பெற்றிருப்பதன் மூலம் நமக்கெல்லாம் பெருமையைத் தேடி தந்துள்ளார். அவரால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் பெருமை அடைந்துள்ளனர்.
மக்கள் நம்பிக்கை
உரிமைகளை தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வு மற்றும் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது. என்றாலும் சட்ட நுணுக்கங்கள், தாமதமான நீதி போன்றவை தடையாக உள்ளன. விரைவான நீதி கிடைப்பதில் ஏராளமான தடைகள் நீடிக்கின்றன. மாற்றுத்தீர்வு தீர்மான மையம் மூலம் இதற்கு சட்டப்பூர்வமான வழிவகை காணப்படுகிறது. தற்போது மாற்றுவழி விவாத தீர்மானங்கள் மையம் நவீன சட்ட பயிற்சிகளின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உள்ளது.
மாற்றுவழி விவாத தீர்மான மையம்
இது நீதித்துறையில் முக்கிய மேம்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்திற்கு வெளியில் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளும் பழக்கம் நமது சமுதாய கட்டமைப்பில் புதிதானது அல்ல. கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் கிராமத்தில் உள்ள வயதான பெரியவரே பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லி சமரசம் செய்து வைக்கும் வழக்கம் உள்ளது. அதுபோல மாற்று வழி விவாத தீர்மான மையமும் கருத்துறைக்கு பாலமாகத் திகழும்.
உணர்வுப்பூர்வமான பேச்சு வார்த்தைகள், ஆய்வு களுக்கு பிறகு முடிவு செய்யும் சிறந்த ஒரு அமைப்பாக இந்த மையம் இருக்கும். பிரச்னைகளை தீர்க்க அனைத்து தரப்பினரிடமும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதும் இந்த மாற்று வழி விவாத தீர்மான மையம் முதன்மையான அமைப்பாக திகழும். மாற்று வழி விவாத தீர்மானம் மையம் வெறுமனே சட்ட விதிகளை பின்பற்றி செயல்படாது. மனிதர்களின் சூழ்நிலைகளையும் அது கவனத்தில் எடுத்துக் கொள்ளும். மனிதர்களிடையே நல்லுறவை மேம்படுத்துவதை உறுதி செய்யும்.
பேச்சுவார்த்தை, நடுவராக இருந்து சமரசம், இணக்கப்படுத்துதல், இரு குழுக்களின் பிரச்னையை தீர்த்து வைத்தல் ஆகியவை மாற்று வழி விவாத தீர்மான மையத்தின் நடை முறைகளாக உள்ளது. புதிய தலைமுறை குடும்பத்தினரிடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும். விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு போன்றவற்றில் சிக்கல்களை இது தீர்த்து வைக்கும்.
பெண்ளுக்கு சவால் அதிகம்
சமுதாயத்தில் பெண்கள் கவுரவத்தையும் சம உரிமையையும் பெற கடுமையாக போராட வேண்டியுள்ளது. சமுதாயத்தில் பெண்கள் முன்னுக்கு வர நிறைய கலாச்சார சவால்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. உலகம் முழுக்க பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்கிறது. அவர்களுக்கான உரிமை, பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம், சுகாதாரம் எல்லாம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
எனவேதான் நான் முன்பு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பில் இருந்த காலக்கட்டங்களில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கும் பல புதுமையான திட்டங்களை அறிமுகம் செய்தேன். அந்த திட்டங்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றன.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து வன்கொடுமைகளையும் நான் கடுமையாக கண்டித்துள்ளேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். 1992ம் ஆண்டு எனது தலைமையிலான அரசுதான் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஏற்படுத்தியது. இதை கண்டு மற்ற மாநிலங்கள் தமிழக வழியை பின்பற்றின.

கடும் தண்டனை சட்டம்
2002ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரும் சட்டத்தை கொண்டு வந்தேன். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் விசாரிக்க உத்தரவிட்டேன். அதேபோல பெண்களிடம் உள்ள வறுமையை ஒழிக்கவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், வீட்டு வசதி, கல்வி, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சமுதாய பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்க நான் விரும்புகிறேன்.
சட்ட உதவிகள் ஏழைகளுக்கும் கிடைக்க செய்யவேண்டியது நமது ஒருங்கிணைந்த பொறுப்பு ஆகும். இன்று தொடங்கப்பட்டுள்ள மையம் அதற்கு வலு சேர்க்கும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்












Click it and Unblock the Notifications