தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்.. போலீஸ் முற்றுகையில் மதுரை
மதுரை: இலங்கையிலிருந்து ஊடுறுவி வந்து மதுரையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக 8 பேர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதால் மதுரை நகரில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரின் முக்கியப் பகுதிகள், எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வழியாக
பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து மதுரைக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 தீவிரவாதிகள்
இதற்காக 8 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில மாதங்களில் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்றும் அந்த தகவல் எச்சரித்துள்ளது.

மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு
இதையடுத்து மதுரை நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையம்- பஸ் நிலையங்கள்
மதுரை விமான நிலையம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையங்களில் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் கண்காணிப்பு
அதேபோல ரயில் நிலையத்திலும் கண்காணிப்பும், ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்கள்
அழகர்கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், தர்காக்கள், சர்ச்சுகள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

3000 போலீஸார்
மதுரை நகரில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் காவல்துறையினர் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், தேவைப்பட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications