Bike: "ஏழைகள்ன்னா KTM பைக் வாங்கக் கூடாதா? அவங்க என் அம்மா இல்ல, அத்தை!" அரியலூர் இளைஞர் ஆதங்கம்
அரியலூர்: கடந்த இரு நாட்களாக விமர்சனத்திற்குள்ளான அரியலூர் இளைஞர், "ஏழைகள் விலை உயர்ந்த பைக்குகளை வாங்கக் கூடாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார். பைக் வாங்க வந்த இளைஞரின் தாய் காலில் செருப்பு கூட இல்லாத நிலையில் அவர்களை கஷ்டப்படுத்தி கேடிஎம் பைக் கேட்குதா என சமூகவலைதளங்களில் அந்த இளைஞரை நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர்.

இளைஞர் ஒருவர் கேடிஎம் பைக்கை வாங்கிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவருடன் இருந்த பெண் ஒருவர் காலில் செருப்புக் கூட அணியாமல் காது,கழுத்து, மூக்கில் ஒரு பொட்டு நகைக் கூட அணியாமல் இருந்தார்.
அந்த வீடியோவில் அந்த பெண் மிகவும் உணர்ச்சி பொங்க பணத்தை கொடுத்தார். வாகனத்தை ஸ்டார்ட் செய்து வைத்தார். இந்த வீடியோவுக்கு பின்னணியில் சாதிச்சுட்ட மாறா என்ற டயலாக் இருந்தது. அதன் பின்னணி இசையும் சேர்க்கப்பட்டிருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள், "என்னத்த சாதிச்சிட்டே! உன் தாய் கழுத்தையும் காலையும் பார், செருப்போ, ஒரு குண்டுமணி தங்கமோ இல்லாத ஏழை நிலையில், அவர்களை வருத்தி இந்த விலை உயர்ந்த பைக் தேவையா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
அந்த பைக்கை வாங்கியது, அரியலூர் மாவட்டம் கோரியாம்பட்டியை சேர்ந்த அஜய் என தெரியவந்தது. இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், என்னுடன் இருந்தவர் எனது அம்மா கிடையாது, அத்தை! அவர் வேலையில் இருந்தார், அவரை கையோடு அழைத்து வந்ததால் அவர் நகை ஏதும் அணியாமல் இருந்தார்.
மற்றபடி குடும்பத்தினர் கஷ்டப்படுத்தி நான் பைக்கை வாங்கியதாக சொல்கிறார்கள். ஆனால் நான் எப்படி பைக் வாங்கினேன் என்பது என் குடும்பத்தினர், என் சொந்த பந்தம், உறவினர்களுக்கு தெரியும்.
நான் பாலிடெக்னில் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு பகுதி நேர வேலைகளை பார்த்து பார்த்து சேர்த்த பணத்தில்தான் பைக்கை வாங்கினேன். ஏழைகள் என்றால் விலை உயர்ந்த பைக் வாங்கக் கூடாதா? எனது அத்தை, எனது குடும்பத்தினர் குறித்து இணையத்தில் பலர் தேவையில்லாத கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் நான் கடந்த இரு தினங்களாக மன உளைச்சலில் உள்ளேன்.
எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமிருந்து எனக்கு போன் கால்கள் வருகின்றன. அதில், நெட்டிசன்கள் எங்களை விமர்சிப்பது குறித்து அவர்கள் கேட்கிறார்கள். எனவே தயவு செய்து முழு தகவல்கள் தெரியாமல் இனியும் எங்களை பேசு பொருளாகி யாரும் விமர்சிக்க வேண்டாம் என அஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
