அரியலூரில் 100 நாள் வேலைக்கு போன வசந்தா.. வீடு திரும்பி வந்து பார்த்தால் 35 லட்சம் தங்க நகைகள் காலி
அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவரது வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம், 3 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக 2 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் போர்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி வசந்தா (வயது 68). இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். மகள்கள் 3 பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார். இதில் ராமலிங்கத்தின் 2-வது மகள் இளவரசியின் (33) கணவர் இறந்து விட்ட நிலையில், அவர் தனது தாயான வசந்தியுடன் வசித்து வருகிறார். இளவரசி, சுத்தமல்லி கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். வசந்தாவின் நகைகள் மற்றும் பணம், இளவரசியின் நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவை வீட்டில் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை இளவரசி வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வசந்தா தனது வீட்டை பூட்டிவிட்டு, 100 நாள் வேலைக்கு போய்விட்டார். வசந்தா நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆடிப்போனார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்திருக்கிறது.
பீரோவில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மற்றும் அலமாரியில் பையில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக வசந்தா மற்றும் இளவரசி ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனிடையே கொள்ளை சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி சீராளன் ஆகியோர் அங்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
கொள்ளை தொடர்பாக கண்டுபிடிக்க மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய நாய், சிறிது தூரம் சென்று சாலையில் படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இதையடுத்து கைரேகை நிபுணர் சத்தியராஜ் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கு வந்து கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தார். இதனிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக துப்பு துலக்க 2 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவிட்டார்.
அதன்படி இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் ஒரு தனிப்படையும், இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications