பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரேயொரு உத்தரவு.. 21 வகுப்புவாத வன்முறை வழக்குகள் வாபஸ் - சிக்கலில் கர்நாடக அரசு?

Google Oneindia Tamil News

கர்நாடகா: வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான கர்நாடக மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 21 முக்கிய வகுப்புவாத வன்முறை தொடர்பான வழக்குகள் கைவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி கர்நாடகாவில் ஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 321வது பிரிவில் கீழ் சில வழக்குகளை திரும்பப் பெற அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து கர்நாடகாவின் மக்கள் சுதந்திரம் சங்கம் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த கர்நாடக ஐகோர்ட், டிசம்பர் 21, 2020 அன்று அளித்த தீர்ப்பில், 'கர்நாடக அரசின் ஆகஸ்ட் 31 தேதியிட்ட உத்தரவின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படக் கூடாது' என்று உத்தரவிட்டது. இது மாநில அரசுக்கு 'வழக்கு தொடரப்படுவதைத் திரும்பப் பெறுவதற்கான ' அதிகாரத்தை அளிப்பதாக விமர்சிக்கப்பட்டது.

 21 வழக்குகள் வாபஸ்

21 வழக்குகள் வாபஸ்

இந்நிலையில், பாஜக அரசின் 2020 ஆகஸ்ட் 31 உத்தரவின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கர்நாடக நீதிமன்றங்களில் வகுப்புவாத வன்முறை மற்றும் அது தொடர்பான வன்முறை சம்பந்தப்பட்ட 21 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பாஜக எம்.பி., மைசூரு பிரதாப் சிம்ஹா, இந்து குழுக்களின் 206 உறுப்பினர்கள் மற்றும் 106 முஸ்லிம்கள் பயனடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2014 மற்றும் 2019 க்கு இடையில் நிகழ்ந்த வகுப்புவாத சம்பவங்கள் தொடர்பான 21 வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து, ஆகஸ்ட் 31 உத்தரவுக்கு பின்னர் கர்நாடக அரசு விசாரணை நீதிமன்றங்களை அணுகியது தெரியவருகிறது. அதன்பிறகு, அக்டோபர் 10 முதல் 2020 டிசம்பர் 10 வரை அந்த குறிப்பிட்ட 21 வழக்குகள் நீதிமன்றங்களால் கைவிடப்பட்டன.

 அமைச்சரின் பரிந்துரை

அமைச்சரின் பரிந்துரை

முன்னாள் சட்ட அமைச்சர் ஜே சி மதுசாமி (தற்போதைய சொட்டு நீர்ப்பாசன அமைச்சர்), பாஜக எம்.எல்.ஏ சுனில் நாயக் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் பிரபு சவான் ஆகியோரின் கோரிக்கை பேரில் இந்த வழக்குகள் கைவிடப்பட்டன.

ஒவ்வொரு வழக்கிலும் மாநில காவல்துறை மற்றும் சட்டத் துறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்த போதிலும் வழக்குகள் கைவிடப்பட்டன.

2015 முதல் 2018 வரை மைசூர் மாவட்டத்தின் ஹுன்சூர் பகுதியில் நிகழ்ந்த இனவாத சம்பவங்கள் சம்பந்தப்பட்ட 13 வழக்குகளை கைவிடுமாறு சட்ட அமைச்சர் மதுசாமி கோரியுள்ளார்.

 தப்பித்த மைசூரு எம்பி

தப்பித்த மைசூரு எம்பி

இந்த 13 வழக்குகளில் முக்கியமாக, மைசூரு எம்.பி சிம்ஹா, ஹனுமன் ஜெயந்தி நிகழ்வின் போது, போலீஸ் தடுப்புகளை உடைத்து தனது ஜீப்பை ஓட்டி வந்தது தொடர்பான வழக்கும் உள்ளது. இதில், சிம்ஹா மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அரசு ஊழியரை தனது கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது, அரசு ஊழியரை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டது என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், ஆளும் பாஜக அரசின் ஆகஸ்ட் 31 உத்தரவின் அடிப்படையில் ஹன்சூர் நீதிமன்றம் இந்த வழக்கை கைவிட்டது.

 ஹிந்து - முஸ்லீம் மோதல்

ஹிந்து - முஸ்லீம் மோதல்

ஹுன்சூரில் நடந்த இனவாத சம்பவங்கள் தொடர்பான மற்ற வழக்குகள் அனைத்தும் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று திரும்பப் பெறப்பட்டன. அந்த வழக்குகள் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஹிந்து - முஸ்லிம் குழுக்களுக்கு இடையிலான மோதல்களுடன் தொடர்புடையவர்கள்.

குறிப்பாக, அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பானவையாகும். இதில், 142 இந்து இளைஞர்கள் மற்றும் 40 முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன.

 ஹொன்னவர் வன்முறை

ஹொன்னவர் வன்முறை

2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உத்தர கன்னட மாவட்டத்தின் ஹொன்னவர் பகுதியில் நடந்த வகுப்புவாத வன்முறை சம்பந்தப்பட்ட ஐந்து வழக்குகள், பட்கல் பாஜக எம்.எல்.ஏ, சுனில் நாயக்கின் வேண்டுகோள் பேரில் கைவிடப்பட்டன.

2017 டிசம்பரில் ஹொன்னாவரில் நடந்த இந்த இன வன்முறையில் மர்மமான முறையில் இறந்த 19 வயது பரேஷ் மேஸ்தாவின் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க பாஜக கோரியது. பின்னர் வழக்கு சிபிஐ-க்கும் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கால்நடை பராமரிப்பு அமைச்சர் பிரபு சவான் வேண்டுகோளின் அடிப்படையில், பிடார் நகரத்தைச் சேர்ந்த இரண்டு வழக்குகள் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட மற்ற வழக்குகளில் அடங்கும்.

பாஜக அரசின், ஆகஸ்ட் 31 உத்தரவின் அடிப்படையில் பசுக்களைக் கொண்டு செல்லும் நபர்களைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் விடுவிக்கப்பட்டார், ஆனால் மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை விடுவிக்கக் கோரி அமைச்சர் பரிந்துரைத்தும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதுதொடர்பான விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது.

 சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு

பிடாரில், 2018ம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பான வன்முறையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக எட்டு ஹிந்து இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்கும், அமைச்சர் சவானின் பரிந்துரையின் பேரில் டிசம்பர் 10ம் தேதி கைவிடப்பட்டது.

இந்நிலையில், மாநில அரசின் இந்த 'வழக்குகள் கைவிடல்' உத்தரவிற்கு தடை விதித்தது தொடர்பான வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

English summary
21 communal violence cases withdrawn Karnataka - shock
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X