நாட்டில் முதல் முறை.. பெங்களூரில் நடத்தப்பட்ட 5ஜி சோதனை வெற்றி.. 4ஜியை விட 50 மடங்கு வேகமாம்!
பெங்களூர்: பெங்களூர் எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 5ஜி நெட்வொர்க் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது 4ஜியை ஒப்பிடும்போது 50 மடங்கு வேகமாக உள்ளது.
இந்தியாவில் 4ஜி சேவை நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் 5ஜி சேவையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் மத்திய அரசு மிகுந்த ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. ஏனென்றால் இதன்மூலம் இந்தியாவில் தொழில் வளர்ச்சி மேம்படும்.

சோதனைகள் நடத்த திட்டம்
இதற்கிடையே தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்கள் மூலம் 5ஜி கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சோதனைகள் நடத்த முடிவுகள் செய்யப்பட்டன. இந்தியாவில் 5ஜி நடைமுறைக்கு வந்தால் நம் நாட்டின் பொருளாதார மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி காணும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் சோதனை வெற்றி
இந்நிலையில் தான் இந்திய தொலைதொடர்பு ஆணையம் (டிராய் or TRAI) மூலம் நாட்டில் முதல் முறையாக நேற்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் (பிஎம்ஆர்சிஎல்) சார்பில் எம்ஜி ரோடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 5ஜி நெட்வொர்க் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்தது. இந்த சோதனையின்போது 4ஜியை ஒப்பிடும்போது 5ஜி அதிவேகமாக இருந்துள்ளது.

50 மடங்கு வேகம்
இதுதொடர்பாக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 5ஜி சேவை செய்ய டிராய் முடிவு செய்தது. இதற்காக ஓடிஎஸ்சி, டிஏஎஸ் ஆகியவை ஜியோ நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டு வந்தது. தற்போது சோதனை முடிந்துள்ளது. 200 மீட்டர் சுற்றளவுக்கு 5ஜி சேவை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டவுன்லோடு செய்யும் வேகமானது நொடிக்கு 1.45 Gbps வேகத்திலும், பதிவேற்றம் (Upload) வேகம் நொடிக்கு 65Mbpsஆகவும் இருந்தது. இது தற்போதுள்ள 4ஜி சேவையைவிட 50 மடங்கு வேகமாகும்'' என கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ நிர்வாக இயக்குனர்
இதுபற்றி பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் கூறுகையில், "3 மாதங்களாக டிராய் உடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ மூலம் 5ஜி நெட்வொர்க் உபகரணங்கள் நிறுவும் பணியை மேற்கொண்டு வருகிறோம். நேற்று காலை 11 மணிக்கு 5ஜி சோதனையை வெற்றிக்கரமாக முடித்தோம். நாட்டில் 5ஜியை சேவையை அறிமுகம் செய்யும் வகையில் டிராய்க்கு உதவி செய்வது என்பது பெருமையான விஷயமாகும்'' என்றார்.

சென்னை ஐஐடியை தொடர்ந்து..
முன்னதாக கடந்த மே மாதம் சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 5ஜி வீடியோ, ஆடியோ கால் சேவையை சோதித்து பார்த்தார். இதுபற்றி அவர், ‛‛5ஜி கால் சேவையை சென்னை ஐஐடி வளாகத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்த்தேன். இது பிரதமரின் கனவு'' என குறிப்பிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல் முறையாக எம்ஜி ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 5ஜி சோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications